சென்னை : ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகி தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி சாதனைப் படைத்துள்ளார். ஒலிம்பிக் போட்டியின் வாள் சண்டை பிரிவில் பங்கேற்பதற்கு உலக தரவரிசையை கணக்கிட்டு தகுதி அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், உலக தரவரிசையில் 45வது இடத்தில் உள்ள 27 வயது பவானி தேவி ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பவானி தேவி, பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்று முத்திரை பதித்த நட்சத்திரம் ஆவார்.
2019ம் ஆண்டு பெல்ஜியம், ஐஸ்லாந்தில் நடந்த உலக கோப்பை வாள் வீச்சு போட்டியில் வெள்ளி, வெண்கல பதக்கங்களை கைப்பற்றினார். AOR என்ற Adjust official ranking எனப்படும் வழிமுறை மூலமாக பவானி தேவி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அடுத்த மாதம் வெளியாகும் அதிகாரப்பூர்வ தரவரிசை மூலம் பவானி தேவி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியானது முறையாக அறிவிக்கப்படும். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் வாள் வீச்சு பிரிவில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை பவானி தேவி பெறுகிறார். தற்போது பவானி ஹங்கேரியில் உள்ள புதாபெஸ்ட் நகரில் தீவிர பயிற்சி பெற்று வருகிறார்.