முந்தைய காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் மோசடி நடந்ததாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்குகளை தொடர்ந்தன.
இந்த வழக்கில், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அந்த கட்சியின் எம்.பி., கனிமொழி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை விசாரித்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், 2017, டிசம்பர் 21-ல், அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை, நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, தினசரி விசாரித்து வந்தார். நவம்பர் 30-ல், அவர் ஓய்வு பெற்றார். இதையடுத்து, இந்த வழக்கு, நீதிபதி யோகேஷ் கன்னாவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இந்த மாதத்திலேயே விசாரணையை நடத்த வேண்டும்’ என, சி.பி.ஐ., சார்பில் வலியுறுத்தப்பட்டது. போதிய அவகாசம் இல்லாததால், அடுத்தாண்டு, ஜனவரியில் 13 – 15க்குள் விசாரணையை துவக்குவதாக, நீதிபதி தெரிவித்தார்.