புதுடெல்லி,
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். இதில் முக்கியமாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் சிங், திக்ரி, காஜிப்பூர் போன்ற எல்லைகளில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. போராட்டம் தொடங்கிய உடன் பல்வேறு மாநிலங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலைகளை மறித்தும், ரெயில் பாதைகளில் மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடைபெற்று வரும் பகுதியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், சட்டசபை தேர்தல் நடைபெறும் தமிழகம், கேரளா, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த முழு அடைப்பை கடைப்பிடிக்க வேண்டாம் என விவசாய சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாரத் பந்த் போராட்டத்தில் ஈடுபட யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. ஆனாலும், வட மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாரத் பந்த் காரணமாக பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.