வாஷிங்டன்:நம் நாட்டில் அண்டை நாடுகளான பாகிஸ்தான் வங்கதேசம் ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினராக இருந்து மத ரீதியில் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு வந்துள்ள ஹிந்து சீக்கியர் உள்ளிட்டோருக்கு குடியுரிமை அளிக்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இது முஸ்லிம்களுக்கு எதிரானது என பல நாடுகளில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அதே போல் இந்தியாவில் மனித உரிமை மீறல் உள்ளதாகவும் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் சிகாகோ நகர கவுன்சிலிலும் இது தொடர்பான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் 26 – 18 என்ற ஓட்டு வித்தியாசத்தில் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. இது குறித்து சிகாகோ நகர மேயர் லோரி லைட்புட் கூறியதாவது:இங்கு நாம் கவனிக்க வேண்டிய பல பிரச்னைகள் உள்ளன. அதைவிட்டு இந்தியாவில் நடக்கும் பிரச்னைகள் குறித்து எதற்கு தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை குறித்து எந்த முழு தகவலும் இல்லாமல் இந்த தீர்மானத்துக்கு எப்படி ஆதரவு அளிக்க முடியும்.இந்தப் பிரச்னையை எழுப்பியது போல் அடுத்ததாக சீனாவில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் தீர்மானம் கொண்டு வரப்படும்.இப்படி சர்வதேச பிரச்னைகளில் மூக்கை நுழைக்க விரும்பவில்லை. உள்ளூர் பிரச்னைகளுக்கு தீர்வு காணவே இந்த கவுன்சில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த தீர்மானத்தை நிராகரித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.