உலகின் மிகப்பெரிய அரிசி இறக்குமதி செய்யும் நாடான சீனா, சுமார் 30 வருடங்களுக்கு பின் முதல் முறையாக இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. குறிப்பாக பாசுமதி அரிசி வகைகளை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2019 – 20 நிதி ஆண்டில் ரூ.31 ஆயிரம் கோடிக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிதி ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் பாசுமதி இல்லாத அரிசி ரூ.8,903 கோடிக்கு ஏற்றுமதி ஆகியிருக்கிறது.

அதே போல் உலகளவில் அதிக அரிசியை இறக்குமதி செய்யும் நாடாக சீனா உள்ளது. 40 லட்சம் டன் அரிசியை ஆண்டுதோறும் இறக்குமதி செய்கின்றது. ஆனால் பல ஆண்டுகளாக இந்திய அரிசி தரமில்லை என காரணம் காட்டி வாங்காமல் இருந்தது.
தாய்லாந்து, வியட்நாம், மியான்மர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்து வந்தது. தற்போது அந்நாடுகளில் விளைச்சல் குறைந்ததால் வரத்தும் குறைந்துள்ளது. முக்கிய அரிசி ஏற்றுமதி நாடான தாய்லாந்தில் வறட்சி நிலவுகிறது. இதனால் சீனாவுக்கு தேவையான அரிசி கிடைக்கவில்லை. எனவே இந்தியாவிடமிருந்து பல ஆண்டுகளுக்கு பிறகு அரிசி இறக்குமதி செய்து வருகிறது.
ஒரு லட்சம் டன் அரிசி இறக்குமதிக்கு சீன ஒப்பந்தம் செய்துள்ளதாக அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம் கூறியுள்ளது. ஒரு டன் சுமார் ரூ.22,000 என்ற குறைந்த விலைக்கு தருகின்றனர். தரத்தை பார்த்த பிறகு அடுத்த ஆண்டு இன்னமும் கூடுதலாக இறக்குமதி செய்வார்கள் என தெரிவிக்கின்றனர்.