கொரோனாவால் சரிந்த இந்திய பொருளாதாரம்!

Dr.K.Krishnasamy

மோடி அவர்களின் இருபது இலட்சம் கோடி நிதியுதவி!!

வீட்டுக்கும் நாட்டுக்கும் முட்டுக்கொடுக்கும் நிர்மலா!

சாமி(அரசு) வரம் கொடுத்தாலும், பூசாரிகள்(வங்கிகள்) அனுமதிப்பார்களா?

இந்தியப் பொருளாதாரம் சரிந்து விடாமல் தடுத்து நிறுத்த பல்வேறு பொருளாதாரத் திட்டங்களை அறிவித்து வீட்டுக்கும், நாட்டுக்கும் முட்டுக்கொடுக்கும் மத்திய நிதி அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களின் மகத்தான செயல் பாராட்டுக்குரியது. இரண்டு மாத கால முழுமுடக்கத்திலிருந்து மீள 20 லட்சம் கோடி நிதி உதவி திட்டங்கள் அளிக்கப்படும் என்று நேற்றைய தினம் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அறிவித்திருந்தார். அதேபோல இன்று மத்திய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்கள் ஆறு விதமான திட்டங்களை அறிவித்திருக்கிறார். அத்தனை அம்சங்களும் மனப்பூர்வமாக வரவேற்கத் தகுந்தாகும்.

கரோனா நோய் இந்தியாவிலும் தொற்றிய பிறகு, அந்த நோயை வேகமாக பரவாமல் தடுத்திடும் பொருட்டு, தேசிய அளவில் மார்ச் 22-ஆம் தேதியும், அதைத்தொடர்ந்து மார்ச் 24-ஆம் தேதியிலிருந்து இன்று வரையிலும் முழு முடக்கம் அமலில் இருக்கிறது. இந்த முழு முடக்கத்தை மார்ச் 22-ஆம் தேதிக்கு முன்பு, எந்த இந்தியரும் கனவிலும் எண்ணி பார்த்திருக்கமாட்டார்கள். 130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் ஒரு நாட்டில் இதுபோன்ற ஒரு நடவடிக்கையை வெற்றிகரமாக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல!

முழு முடக்கத்தால் இந்திய மக்கள் பட்ட இன்னல்களை எளிதில் விவரிக்க இயலாது. ஆனால், அதற்கு பலன்கள் இல்லை என்று சொல்ல முடியாது. முழு முடக்கம் இல்லாமல் இருந்திருந்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சில இலட்சங்களை கூட தாண்டி இருக்கலாம். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் பல மடங்கு கூடியிருக்கும். ஆனால் ஊரடங்கால் உயிரிழப்புகள் சில ஆயிரங்களுக்குள்ளே கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் பொருளாதார தளத்தில் மிகப் பெரிய விலையை கொடுத்திருக்கிறோம். கடந்த இரண்டு மாத காலத்தில் வறுமை கோட்டிற்கு கீழே வாழக்கூடிய 50 கோடி மக்களுக்கு உணவளிக்க வேண்டிய நிலை உருவாயிற்று. அது மட்டுமன்றி அனைத்து நிறுவனங்களுக்கும் ஏதாவது ஒரு வழியில் உதவ வேண்டிய சூழலும் எழுந்துள்ளது. சுதந்திரம் பெற்று 73 வருடங்கள் கழித்த பிறகும் இன்னும் கோடிக்கணக்கான மக்கள் ”அன்றாடம் காய்ச்சிகள்” என்ற நிலையில் இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் அனைத்து தொழில் நிறுவனங்களும், சேவை நிறுவனங்களும் முடக்கப்பட்டதால் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலைமை, இன்னொரு பக்கம் வாங்கிய கடனுக்கு மாதாந்திர தவணை செலுத்த முடியாத அவலநிலை. விளைந்த விளைபொருட்களையும் சந்தைக்கு கொண்டு செல்ல முடியாத விவசாயிகளின் நிலைமை. வேலையும் இல்லை, வருமானமும் இல்லாததால் உணவுக்கே கஷ்டப்படும் பல்வகை தொழிலாளர்களின் அவலநிலை. என்னதான் அரசுகள் சில உதவிகள் செய்தாலும் குடும்பத்தின் முழு தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை.

கரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க பழங்கள் சாப்பிடுங்கள்; காய்கறிகள் சாப்பிடுங்கள்; முட்டைகளை சாப்பிடுங்கள்; கொட்டை வகைகள் சாப்பிடுங்கள் என நாக்கில் எச்சில் ஊற வைக்கும் ஆலோசனைகளும், அறிவுரைகளும் தொலைக்காட்சிகளில் அதிர்ந்தன. ஆனால் மூன்று வேளை சாதாரண உணவை உண்ணக் கூட பல குடும்பங்களுக்கு கஷ்டமானதாகவே இருந்தது. விவசாய தொழிலாளர்கள், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய கோடிக்கணக்கான தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள், வாகன ஓட்டிகள், சலவைத் தொழிலாளர்கள், சவரத் தொழிலாளர்கள், பெட்டிக் கடை வியாபாரம் செய்வோர், ஆட்டோ ஓட்டுனர், ஹோட்டல் தொழிலாளர்கள், பட்டாசு ஆலைகளில் பணிபுரிவோர், நெசவாளர்கள், மீனவர்கள், வீட்டு பணி செய்வோர், மால்களில் விற்பனை பணிபுரிந்தோர், பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றுவோர், மருத்துவர்கள், பொறியாளர்கள் என பலதரப்பட்ட வர்க்கத்தினரும் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஊரடங்கை மெல்ல மெல்ல விலக்கலாம் என அரசு அறிவித்தாலும் தொழில் மற்றும் சேவை நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களை தொடங்க முடியாமல் தத்தளிக்கின்றன. மூடப்பட்ட தொழில்களை திறந்து இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு ஓரிரு வாரங்கள் ஆகும். பிற மாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு பயணிக்கிறார்கள். நகரத்திலிருந்து கிராமப்புறங்களுக்கு சென்றவர்கள் திரும்பும் சூழல் இன்னும் உருவாகவில்லை. பேருந்து, இரயில், விமான போக்குவரத்தும் இல்லை.

சாதாரண மக்கள் முதல் ஆயிரக்கணக்கானோரை வைத்து தொழில் புரிந்த தொழிலதிபர் வரையிலும் அச்சம், கவலை எனும் இருள் அவர்களை கவ்வி நிற்கிறது. தாங்கள் செய்த தொழில் சேவையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதை உணர்கிறார்கள். எல்லோருமே தங்களுடைய வாழ்க்கையில் யாராவது முட்டுக் கொடுக்க மாட்டார்களா? என்று குமுறிக் கொண்டிருந்த நேரத்தில் 20 லட்சம் கோடிக்கு பொருளாதார ஆதரவு கரம் நீளும் என நேற்றைய தினம் பாரத பிரதமர் அறிவித்த கையோடு, இன்று மத்திய நிதியமைச்சரின் பல அறிவிப்புகள் மனதளவில் தளர்ந்து போயிருந்த கோடான கோடி இந்திய மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் முட்டுக் கொடுப்பது போல் அமைந்திருக்கின்றது. மோடி அவர்களுடைய அரசு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கே கருணை காட்டும் என்று குறை சொல்லக் கூடியவர்களுக்கு இன்றைய அறிவிப்பு சாட்டையடியாகவே அமைந்திருக்கிறது.

”சுயசார்பு பாரதம்” என்ற கோஷத்தோடு இந்திய பொருளாதாரத்தை முடுக்கி விட (Economy Stimulation) மோடி அரசு வலுவான நடவடிக்கையை எடுத்திருக்கிறது. இந்திய அளவில் பல இலட்சக்கணக்கில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நலிந்து போகாமல் தடுத்திட 3 லட்சம் கோடி அளவிற்கு திடமான பொருளாதார உதவி திட்டங்களை அரசு அறிவித்திருக்கிறது.

12 மாத கால அவகாசத்துடன் அனைத்து சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வசதி என்பது மிகப்பெரிய அளவிற்கு அந்நிறுவனங்களுக்கு ஊக்கமூட்டக் கூடியதாகவே அமையும். மேலும், அந்நிறுவனங்கள் ஏற்கனவே கடன் பெற்று இருந்தாலும் மீண்டும் புதிய உத்தரவாதம் எதுவும் தராமல் மீண்டும் கடன் வசதி பெறும் வாய்ப்பை அளித்திருக்கிறது. வங்கிகளால் கடன்பெற தகுதியற்ற நிறுவனங்கள் என்று அறிவிக்கப்பட்டு நசிந்த நிலையில் இருந்த இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களை மறுசீரமைக்கவும் வங்கிகள் மூலமாக கடன் உதவி பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முதலில் 25 லட்சம் மதிப்புள்ள முதலீடு இருந்தால் அது குறு தொழில் நிறுவனமாக இருந்தது 1 கோடி ரூபாய் என மாற்றப்பட்டுள்ளது. சிறு தொழில் நிறுவனத்தின் வரையறை 5 கோடியாக இருந்தது 10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நடுத்தர நிறுவனங்களின் வரையறை 10 கோடியாக இருந்தது 20 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு இந்த வரையறைகள் தங்களை வலுப்படுத்திக் கொள்ளவும், புதுப்பித்துக் கொள்ளவும் பேருதவி பெறும். இந்த நடவடிக்கைகளே ”உள்ளூரில் உற்பத்தி உலகளவில் விற்பனை” எனும் இந்திய அரசின் இலட்சியத்தை நிறைவு செய்யும்.

ரூபாய் 200 கோடி வரையிலும் உலக டெண்டர் இல்லை என்ற முடிவு உள்நாட்டு உற்பத்தியை வெகுவாக ஊக்குவிக்கும். அதேபோல வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலமாக வீடுகள் கட்ட மற்றும் பல்வேறு இன்னல்களுக்கும் கடன் வசதி வழங்க 50 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மின் கட்டமைப்புகளை சீரமைக்கவும், அதை முறைப்படுத்தவும் 90,000 கோடி ஒதுக்கி, அதனுடைய பலனை நுகர்வோருக்கு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கான்கீரட் ஒப்பந்தங்களை நிறைவு செய்ய ஆறு மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். அது இப்போது நவம்பர் 31-ஆம் தேதியாக நான்கு மாத காலம் அவகாசம் கொடுத்து நீட்டிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர் வருமான வரித்துறையிடம் கூடுதலாக செலுத்திய தொகையை உடனடியாக பெற்றுக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தொழிலில் வைப்பு நிதியை மேலும் மூன்று மாதங்களுக்கு அரசே செலுத்தவும், தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பல பங்குத் தொகையை 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைத்து இருப்பதும், பொருட்களை வாங்கும் போதும், சம்பளம் கொடுக்கும் போதும் பிடிக்கப்படும் நேரடி வரி பிடித்தங்களை தற்போது 25 சதவீதமாக மட்டும் குறைத்திருப்பதும், மக்களுக்கு நேரடியாக பணம் போய் சேருவதற்கான வழிகளாகும்.

இன்று அறிவிக்கப்பட்டு இருக்கக்கூடிய ஆறு அம்சங்கள் அனைத்தும் மிகுந்த பாராட்டுக்குரியவை. நிதியமைச்சர் என்றாலே மக்களிடமிருந்து அரசு கஜானாவுக்கு நிதியை சேர்க்க கூடியவர்கள் என்ற பார்வை மட்டுமே இதுவரை இருந்தது. இந்திய வரலாற்றில் அரசின் பணம் அனைத்து மக்களின் பாக்கெட்டுகளிலும் நேரடியாக வைக்கப்படுகிறது. இதை ஏதோ ஒரு சாதாரண நடவடிக்கையாக கருத முடியாது. கரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய நிறுவனங்கள் நம்பிக்கையோடு செயல்படுவதற்கும், எவ்வளவு நலிவுற்றாலும் நம்மை இந்த அரசு கைவிடாது. வீட்டுக்கும் நாட்டுக்கும் நிச்சயம் முட்டுக்கொடுக்கும் என்ற நம்பிக்கையை வரவழைத்திருக்கிறது.

மோடி அரசு இந்திய மக்கள் மீது மிகப்பெரிய நல்லெண்ணத்தை கொண்டு இந்த மகத்தான செயலை செய்திருக்கிறது. ஆனால், வங்கிகள் எந்த அளவிற்கு இதனைப் புரிந்துகொண்டு செயல்பட போகின்றன என்பது கேள்விக்குறியாக உள்ளது. இலட்சக்கணக்கான சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை தூக்கி நிறுத்தி, அதன் மூலமாக கோடான கோடி இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதும், இந்தியாவை சுயசார்புடைய தேசமாக மாற்றுவதும் தான் இந்த நிதியுதவியின் மிக முக்கியமான நோக்கம் ஆகும். இந்த இக்கட்டான காலகட்டத்தில் பாரத பிரதமரின் உயரிய நோக்கம் நிறைவேறிட இந்திய வங்கிகள் பரந்த நோக்கத்துடன் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

ஏற்கனவே கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தோற்கடித்தது போல, வங்கிகள் செயல்பட்டால் நாடு ஏற்றுக்கொள்ளாது. இந்த மண்ணோடும் மக்களோடும் இரண்டறக் கலந்திருக்க கூடிய தொழில் முனைவோரை கண்டறிந்து அவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்திட வேண்டும். அவர்கள் செய்யக்கூடிய தொழிலுக்கு காலம் தாழ்த்தாமல் கடன் வசதிகளை செய்து தரவேண்டும். ஏற்கனவே, ஒன்றரை மாதத்திற்கு முன்பு அரசு அளித்த 60,000 கோடியை இன்று வரையிலும் முறையாக பயன்படுத்தியதாக தெரியவில்லை. அரசோடும், மக்களோடும் வங்கிகள் இணைந்து பயணிக்க தவறும் பட்சத்தில் மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாக நேரிடும்; விளைவுகள் விபரீதமாகலாம்.

”சாமி வரம் கொடுத்தாலும் பூசாரிகள் அனுமதிப்பதில்லை” என்ற சொல்லுக்கு ஏற்ப பாரத பிரதமர் மோடி அவர்களின் ”சுயசார்பு பாரதம்” என்ற இலட்சியத்திற்கு இந்திய வங்கிகள் குந்தகம் விளைவிக்கக் கூடாது. எனவே வங்கிகள் தங்களுடைய போக்கை முற்றாக மாற்றி கொள்ள வேண்டும். அவர்கள் மக்களின் நேயர்களாக மாறவேண்டும் என்பதே நமது வேண்டுகோளாகும்.

மேலும், தொழில் நிறுவனங்களுக்கும், மக்களுக்கும் அறிவித்துள்ள மிக பெரிய நிதியுதவிகளை வங்கிகள் முழுமையாக செயல்படுத்துகின்றனவா? என்பதை மத்திய அரசு தினமும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். வங்கிகளை கண்காணிக்க மாவட்டந்தோறும் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். ”தாராளமாக” நடந்துகொள்ளாத வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்றைய அறிவிப்பில் கோடான கோடி நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், இடம்பெயரும் தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள், நெசவாளர்கள், சவரத் தொழில் செய்வோர், சுய தொழில் செய்வோர், கைவினைஞர்கள் உள்ளிட்ட மக்களின் வாழ்வாதரங்களை மீட்டெடுப்பது குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. எல்லா காலகட்டங்களிலும் இவர்கள் கேட்பாரற்று கிடப்பவர்களாகவே இருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய மேம்பாட்டிற்கான திட்டங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

இந்திய நாட்டில் இனிமேலாவது ஏழை, பணக்காரர் என்ற இடைவெளி குறைக்கப்படுவதற்கு உண்டான வலுவான திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். பாரத தேசம் சமூக, பொருளாதார, சமத்துவ பூமியாக மாற வேண்டும். எல்லா காலகட்டங்களிலும் அன்றாடம் காய்ச்சிகளாக இந்திய மக்கள் வாழும் நிலை நீடிக்கக் கூடாது. வாழ்ந்தவரே வாழ்ந்து கொண்டு போகக் கூடிய சூழல் இருக்கக்கூடாது. எல்லோருக்கும் எல்லாம் வந்து சேர வேண்டும். Equality and Equity என்ற நிலை சொல்லளவில் இல்லாமல் செயலாக்கம் பெற்று பாரத திருநாடு வீரநடை போட வேண்டும்.

எழுந்திடும் இந்தியா !

டாக்டர்.க.கிருஷ்ணசாமி,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
14/05/2020.

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*