சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனைக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். வானொலியில் தமிழ்நாடு – கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியில் முதல்முறையாக வர்ணனை செய்தார் இவர்.
அப்துல் ஜப்பார் 1980-களில் இந்தியா விளையாடிய பல சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு தமிழில் வர்ணணை செய்துள்ளார். அப்போது வானொலியில் கிரிக்கெட் வர்ணணை செய்துகொண்டிருந்த பலருமே ஆங்கில வார்த்தைகளை கலந்துபேசுவது வழக்கம். ஆனால், அப்துல் ஜப்பாரின் வர்ணணையில் துளி ஆங்கிலம் கலக்காது. அழகு தமிழில், தெள்ளத்தெளிவான தமிழ் உச்சரிப்பில், பரபரப்பான தருணங்களை தன் கணீர்குரல் மூலம் ரசிகர்களுக்கு கடத்தியவர் அப்துல் ஜப்பார்.
சற்றே அளவு குறைவாக வீசப்பட்ட பந்து.. பேட்ஸ்மேன் கவாஸ்கர் முன்னே வந்து அடித்து ஆடாமல் சற்று பின்வாங்கி காலைப் பின் வைத்து அதை டீப் லெக் ஸ்கொயரில் அழகாக திருப்பி விடுகிறார். பந்துஎல்லைக் கோட்டை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது இருவர் துரத்துகிறார்கள்.. ஆனால் அவர்களுக்கு முன் பந்து எல்லைக் கோட்டை கடந்து விட்டது.. ஆம் 4 ரன்கள்.. இந்தியாவுக்கு மேலும் 4 ரன்கள்...." கோடிக்கணக்கானோரை ஒரே நேரத்தில் குதூகலப்படுத்திய அந்த ஒரே குரல்....மறக்கமுடியாத தமிழ் வர்ணனையாளர்... எண்பத்தொரு வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமாகிவிட்டார் அப்துல் ஜப்பார்..
இவருடைய அழகு தமிழ் வர்ணணைக்கு எம்ஜிஆர், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் எனப்பலரும் ரசிகர்கள். பிரபாகரன், அப்துல் ஜப்பாரை தமிழீழத்துக்கு நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். இந்த அனுபவத்தை புத்தகமாகவும் எழுதியிருக்கிறார் அப்துல் ஜப்பார்.
இந்நிலையில் பிரபல கிரிக்கெட் தமிழ் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 81. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.