பாரத பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாள் இன்று உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் பாஜகவினர் பல்வேறு நல்ல செயல்களை செய்துவருகின்றனர். அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள சூரத் நகரில் 70 ஆயிரம் மரக்கன்றுகளை நட அம்மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் பாஜக சார்பில் மிகப்பெரிய லட்டு செய்து வைத்து, பிரதமரின் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. கட்சி தலைவர் ஷியாம் ஜாஜு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பலர் பங்கேற்றனர். பின்னர் அந்த பெரிய லட்டு அனைவருக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது.
டெல்லியில் இன்று காலை பாஜக சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. பாஜக எம்பி அர்ஜுன் சிங் பேரணியை துவக்கி வைத்தார்.
பாரத பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதிலும் சேவை வாரம் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 14 ம் தேதி தொடங்கிய இந்த சேவை வாரம் 20 ம் தேதி வரை நடைபெறுகிறது. கட்சி தொண்டர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சேவை வார விழாவை முன்னிட்டு இரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் போன்ற பணிகளில் பாஜக தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.