டாக்கா,
பிரதமர் மோடி கடந்த 1 ஆண்டாக கொரோனா பரவத்தொடங்கிய பிறகு எந்த வெளிநாட்டுக்கும் செல்லாமல் இருந்தார். இதற்கிடையில், வங்காளதேசத்தின் 50-வது சுதந்திர தினம் மற்றும் அந்நாட்டின் தேசத்தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தார்.
எனவே 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று வங்காளதேசம் சென்றார். டெல்லியில் இருந்து இன்று பிரதமர் மோடி காலை 10.45 மணியளவில் வங்காளதேச தலைநகர் டாக்கா சென்றடைந்தார். டாக்கா சென்ற பிரதமர் மோடியை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார்.
அதனை தொடர்ந்து பிரதமர் மோடி வங்காளதேச தேசிய தின விழாவில் பங்கேற்கிறார். வங்காளதேசத்தின் தந்தை என கூறப்படும் முஜிபூர் ரகுமானின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார். ஜஷோரிஷ்வரி காளி கோவிலுக்கு வழிபாடு நடத்துகிறார். மேலும், ஒரகண்டி என்ற இடத்தில் மடுவா சமூக பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
அதுமட்டுமின்றி, இந்த பயணத்தின்போது வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பிரதமர் மோடி பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். இதில், ரோகிங்கியா அகதிகள் விவகாரம், இரு நாட்டு பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.