கவுகாத்தி,
அசாமில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி நேற்று முதல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் இன்று அம்மாநிலத்தில் உள்ள ஜோர்ஹட் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்றார்.
126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் மார்ச் 27-ம் தேதி 47 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி 39 தொகுதிகளுக்கும், முன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி 40 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் மெகாகூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலேண்ட் மக்கள் முன்னணி, இடது சாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாஜக கூட்டணியில் அசோம் ஞான பரிஷத் கட்சி, ஐக்கிய மக்கள் விடுதலை கட்சி இடம்பெற்றுள்ளன. தற்போது அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
அதில் பேசிய ராகுல்காந்தி, காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 400 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு விலை தற்போது பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 900 ரூபாயாக உள்ளது. இதனால் யார் பயனடைகின்றனர்? எழைமக்கள் இல்லை. நாட்டில் உள்ள 2 முதல் 3 தொழிலதிபர்கள் பயனடைகின்றனர். அவர்களது வரிப்பணம் மற்றும் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால், மக்களுக்கு எதுவும் செய்யவில்லை’ என பிரசார கூட்டத்தில் பேசியனார்.