கேரளாவில் 19 வயது கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியாரும், மற்றொரு கன்னியாஸ்திரியும் குற்றவாளி என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் கன்னியாஸ்திரி அபயா(19). இவர் அங்குள்ள செயின்ட் பயன் கான்வென்டில் தங்கியிருந்த சமயத்தில் 27 மார்ச் 1992 அன்று அங்குள்ள கிணற்றில் இறந்து கிடந்தார். இதை விசாரித்த போலீசார், அவர் தற்கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் சிபிஐ., விசாரிக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர் ஜோமோன் கேரள ஐகோர்ட்டில் தனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து இந்த வழக்கு சிபிஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர்களும் தற்கொலை என்றே கூறினர். 2வதாக நியமிக்கப்பட்ட சிபிஐ., வசாரணையில் அபயா கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிய வந்தது. 3வது குழு விசாரித்தத்தில் இந்த கொலையை செய்தவர்கள் பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில் மற்றும் கன்னியாஸ்திரி செபி என தெரியவந்தது. இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
பாதிரியார்களுக்கும், கன்னியாஸ்திரி செபிக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதை அபயா நேரில் பார்த்துள்ளார். எங்கே அவர் வெளியே சொல்லிவிடுவாரோ என பயந்து, அபயாவை கொலை செய்து கிணற்றில் வீசி உள்ளனர். இந்த வழக்கில் பாதிரியார் ஜோஸ் மட்டும் அவருக்கு எதிராக தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். மற்ற இருவர் மீது வழக்கு நடந்து வந்தது.
நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பலரது வாக்குமூலங்கள் வழக்கில் முக்கிய சாட்சிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றவாளிகள் என வழக்கை விசாரித்த சிபிஐ., சிறப்பு நீதிமன்றம் இன்று 22 டிசம்பர் 2020 அறிவித்தது.
28 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று குற்றவாளிகள் யார் என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. கொலை செய்யப்பட்ட அபயாவின் மரணத்திற்கு நீதி கிடைத்துள்ளது. இந்த விஷயத்தை சுட்டிக்காட்டி பலரும் சமூகவலைதளமான டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டனர்.
”கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின் சகோதரி அபயாவின் ஆன்மாவுக்கு நீதி கிடைத்தது”. ”28 ஆண்டுகள், சகோதரி அபயாவுக்கான வழக்கில் இமயமலை அளவுக்கு பல தடைகளை தாண்டி நீதி கிடைத்துள்ளது. நன்றி சிபிஐ., இதேப்போன்று சுஷாந்திற்கும் கிடைக்கும் என நம்புகிறோம்”. ”28 ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு, இறுதியாக சகோதரி அபயாவின் ஆத்மாவுக்கு இன்று நீதி கிடைத்தது. மனித உரிமை ஆர்வலர் ஜோமோன், சிபிஐ மற்றும் பிற காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி”. இதனால் இந்த விவகாரம் #ThomasKottoor, #SisterAbhaya ஆகிய ஹேஷ்டாக்குகளின் பெயரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின.