அத்திவரதர் வி.வி.ஐ.பி. தரிசன வரிசையில் வியக்க வைத்த குட்டி `வி.ஐ.பி-க்கள்’!

நன்றி: சிவநந்து

அத்தி வரதருக்கு இந்த
சிறுவர்களை பிடித்து விட்டது.!!

அத்திவரதர் வி.வி.ஐ.பி. தரிசன வரிசையில் வியக்க வைத்த குட்டி `வி.ஐ.பி-க்கள்’!

அத்திவரதர் தரிசனம்,
நாடோடி இனச் சிறுவர்கள்.

ஆண்டவன் முன்பு அனைவரும் சமம். அத்திவரதர் தரிசனத்தில் நேற்று நடந்த சம்பவம் ஒன்று அதை மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

சுவாமியைப் பார்க்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்ட நாடோடி இனச் சிறுவர்கள் வி.வி.ஐ.பி தரிசனத்தில் அத்திவரதரை தரிசித்த சம்பவம் நடந்துள்ளது.

நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தரிசனம் என்பதால் அத்திவரதரைக் காண பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் காஞ்சிபுரத்துக்கு வருகிறார்கள். சிங்கப்பூர், மலேசியா இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பக்தர்கள் அத்திவரதரைக் காண லட்சக்கணக்கில் செலவு செய்து குடும்பம் சகிதமாக காஞ்சிபுரம் வருகிறார்கள்.

கடந்த 31 நாள்களாகவே சயனக் கோலத்தில் அருள்பாலித்துக் கொண்டிருந்தார் அத்திவரதர். கடைசி நாள் என்பதால் கோயிலுக்கு வந்திருந்தவர்கள், `எப்படியாவது அத்திவரதரை தரிசித்துவிட வேண்டும்’ எனக் கால்கடுக்க நின்று கொண்டிருந்தார்கள். மதியம் 3 மணிவரை மட்டுமே வி.ஐ.பி தரிசனத்தில் செல்பவர்களுக்கு அனுமதித்திருந்தார்கள்.

மற்ற நாள்களைவிட நேற்று கூட்ட நெரிசல் மிகக் குறைவாகவே இருந்தது. எவ்வித பாஸ் மற்றும் டிக்கெட்டும் இல்லாமலேயே சிலர் வரிசையில் நின்றிருந்தார்கள். அந்தநேரத்தில் இரண்டு சிறுவர்கள் கண்கள் கலங்கியவாறே கோயிலின் உள்பகுதிக்குச் செல்லும் வழியில் இருந்து வெளியேறிக்கொண்டிருந்தார்கள்.

அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்தோம்.

“என்பேரு நவீன். ஏழாவது படிக்கிறேன். என்னோட தம்பி வெற்றி, நாங்க பக்கத்துல இருக்குற சுங்குவார்சத்திரம் ஊர்ல இருந்து வந்திருக்கிறோம். அப்பா, அம்மா இங்க அத்திவரதர் பட வியாபாரம் செய்யறாங்க. ஒரு படம் வித்தா 10 ரூபாய் கிடைக்கும். நேரம் கிடைக்கும் போது நாங்களும் அவங்களுக்கு உதவியா இருப்போம். சாமியப் பார்க்க தெனமும் கூட்டமா போவாங்க.

ஒருமுறையாவது அந்தச் சாமிய பார்க்க முடியாதான்னு ஏக்கமா இருக்கும். `தெனமும் வர்றோம்… அந்தச் சாமிய பார்க்க முடியல. இன்னைக்கு கூட்டம் காலியா இருக்குது. எப்படியாவது சாமிய பார்த்துடணும்டா’ன்னு சொன்னான். நானும் அவன் ஆசையை நிறைவேத்தணும்னு கூட்டத்தோட கூட்டமா அவனை வரிசையில கூட்டி வந்து நின்னேன். ஒரு சில இடத்துல எதுவும் கேட்காம அனுப்பிட்டாங்க. நாங்களும் ஆசை ஆசையா உள்ளே வந்துகிட்டிருந்தோம்.

கோயில் உள்ளே நுழைஞ்சதும் அங்கிருந்த போலீஸ்காரர் நீங்க எப்படி வி.ஐ.பி வரிசையில சாமி பார்க்க வந்தீங்க’ன்னு கேட்டார்.நாங்க வெளியே சொல்லிட்டு வந்தோம்’னு சொன்னோம். ஆனாலும் விடல. பாஸ் இருக்கான்னு கேட்டு எங்களை வெளியே இழுத்து தள்ளி விட்டுட்டார். பாஸ் இருக்கறவங்க மட்டும் தான் பார்க்க முடியும்னு எங்களுக்குத் தெரியாது. அவசரமா எல்லோரையும் உள்ளே அனுப்பியதால எங்களையும் சேர்த்து உள்ளே அனுப்பிட்டாங்க. சாமிய பார்க்க முடியலியேன்னு கஷ்டமாயிடுச்சு” என வெள்ளந்தியாக தழுதழுத்தனர்.

`அத்திரவதரை தரிசிக்க வேண்டும்’ என்ற அந்தச் சிறுவர்களின் ஆசை அங்கிருந்த காவல்துறை அதிகாரி ஒருவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, அந்தச் சிறுவர்களுக்கு வி.வி.ஐ.பி வழியாகச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

வி.ஐ.பி-யை விட வி.வி.ஐ.பி வரிசை காலியாகவே இருந்தது. `எப்படியும் அத்திவரதரை தரிசித்துவிடுவோம்’ என்பதால், அந்தச் சிறுவர்களுக்கு உள்ளுக்குள் பரம ஆனந்தம். வேகமாக நடந்து வந்தபோது அவர்கள் முகத்திலும் அதைக் காணமுடிந்தது.

வசந்த மண்டபத்தில் உள்ள அத்திவரதரை நெருங்கியதும் அவர்களின் முகத்தில் அளவில்லா மகிழ்ச்சியைக் காண முடிந்தது. வி.வி.ஐ.பி வரிசையில் வந்த மக்களோடு மக்களாகக் கைகூப்பி அத்திவரதரை வேண்டிக்கொண்டனர். கைப்பையில் இருந்த பணத்தில் பத்து ரூபாயை எடுத்து அர்ச்சகர் தட்டில் போட்டு விட்டு மகிழ்ச்சியோடு வெளியே வந்தார்கள் அந்த நாடோடி இனச் சிறுவர்கள்.

இறைவனுக்கு இந்த சிறுவர்கள் புடித்திருக்கிறது ,, அதனால் அவரே காவல் துறை அதிகாரியாக இருந்து உள்ளே அழைத்து வந்துள்ளார்

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*