நைபிடா:
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கடந்த பிப்ரவரி 1ந்தேதி ஆட்சியை கைப்பற்றிய ராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது.
ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை ராணுவம் அறிவித்துள்ளது.
மியான்மர் ராணுவத்துக்கு சீனா ஆதரவாக இருப்பதாக கூறி அந்நாட்டு நிறுவனங்களை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். இதனையடுத்து, வன்முறைகளை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மியான்மர் அரசை கேட்டு கொண்ட சீன தூதரகம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இந்த நிலையில், மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1ந்தேதியில் இருந்து, ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பின்னான வன்முறை சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட அமைதிவழியில் போராடிய போராட்டக்காரர்கள் 138 பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர் என ஐ.நா. அமைப்பின் பொது செயலாளரின் செய்தி தொடர்பு அதிகாரி ஸ்டெபானி டுஜார்ரிக் தெரிவித்து உள்ளார்.
இவர்களில், யாங்கூன் நகரில் கடந்த ஞாயிற்று கிழமை 38 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். கடந்த சனிக்கிழமை 18 பேர் லெயிங் தாயிர் பகுதியை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என டுஜார்ரிக் கூறியுள்ளார்.
மியான்மர் மக்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிராக நடந்து வரும் தொடர் வன்முறைக்கு ஐ.நா. பொது செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மியான்மர் மக்களுக்கு ஆதரவாக ஓரணியில் திரள சர்வதேச சமூகத்திற்கு அவர் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுபற்றி முறையான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். இதேபோன்று மியான்மர் நாட்டில் நடந்து வரும் வன்முறை சம்பவங்களுக்கு ஐ.நா. பொது செயலாளருக்கான சிறப்பு தூதர் கிறிஸ்டைன் ஸ்கிரானெர் பர்கனெரும் நேற்று கடும் கண்டனம் வெளியிட்டார்.