செய்திகள் • January 05, 2026

2025ல் இந்தியாவில் இருந்து ₹4.51 லட்சம் கோடி ஐபோன் ஏற்றுமதி – மேக் இன் இந்தியா வெற்றி

2025ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை தனது முக்கிய உற்பத்தி மையமாக மாற்றியுள்ளது. அந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து 50 பில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் சுமார் ₹4.51 லட்சம் கோடி மதிப்புள்ள ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிக்கையில், 2025ம் ஆண்டு மட்டும் $40 பில்லியன் மதிப்புள்ள ஐபோன்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இது பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு கிடைத்த முக்கிய மைல்கல்லாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 11 ஆண்டுகளில் மின்னணு உற்பத்தி 6 மடங்கு உயர்ந்துள்ளதாகவும், மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் முதல் மூன்று பொருட்களில் மின்னணு பொருட்கள் ஒன்றாக மாறியுள்ளது.

இந்த ஆண்டில் நான்கு புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலைகள் துவங்கப்பட உள்ளதாகவும், மின்னணு உற்பத்தித் துறையில் தற்போது 25 லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். சில தொழிற்சாலைகள் ஒரே இடத்தில் 40,000 பேருக்கு வேலை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் நிறுவனம் இந்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் (PLI) இல் இணைந்து செயல்படுகிறது. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

தற்போது இந்தியாவில் ஆப்பிளுக்கு ஐந்து ஐபோன் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இதில் மூன்று டாடா குழுமத்தாலும், இரண்டு பாக்ஸ்கான் குழுமத்தாலும் நிர்வகிக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் வடிவமைப்பு, உற்பத்தி, ஓஎஸ், கருவிகள் உள்ளிட்ட மின்னணு சூழலில் இந்தியா உலக அளவில் முக்கிய பங்கு வகிக்கும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

Open full site