விளையாட்டு • March 07, 2026

அக்சர் படேல் அதிரடி: அரையிறுதியில் இந்தியாவை பைனலுக்கு கொண்டு சென்ற ‘சகலகலா வல்லவன்’

டி-20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக அவரது அற்புதமான பீல்டிங் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. பும்ரா வீசிய பந்தை இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் அடிக்க, அதனை பிடிக்க அக்சர் படேல் சுமார் 24 மீட்டர் தூரம் பின்னோக்கி ஓடி அசத்தலான கேட்ச் பிடித்தார். இந்த கேட்ச் 1983 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் கபில்தேவ் பிடித்த புகழ்பெற்ற கேட்சை நினைவுபடுத்தியது.

மேலும் அர்ஷ்தீப் சிங் வீசிய ஓவரில் வில் ஜாக்ஸ் அடித்த பந்தை எல்லை அருகே பிடித்த அக்சர் படேல் சமநிலையை இழந்தபோதும் புத்திசாலித்தனமாக பந்தை மைதானத்திற்குள் இருந்த ஷிவம் துபேவிடம் எறிந்தார். இதனால் அந்த விக்கெட் இந்தியாவிற்கு கிடைத்தது. இந்த ‘ரிலே கேட்ச்’ அவரது பீல்டிங் திறனை வெளிப்படுத்தியது.

போட்டிக்குப் பிறகு பேசிய அக்சர் படேல், “ஹாரி புரூக் அடித்த பந்தை பிடித்தது மிகவும் கடினமான கேட்ச். ஜாக்ஸ் அவுட் ஆன கேட்ச் அணிக்கு முக்கியமான தருணமாக இருந்தது. அந்த நேரத்தில் பெரிய கூட்டணியை உடைக்க முடிந்தது. பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் இன்னும் ஓவர்கள் மீதமிருந்ததால் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது,” என்றார்.

இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் கவாஸ்கர், அக்சர் படேலின் ஆட்டத்தை பாராட்டினார். அவர் கூறுகையில், “பீல்டிங், பவுலிங், பேட்டிங் என அனைத்திலும் சிறப்பாக விளையாடும் அக்சர் படேல் இந்தியாவின் முக்கிய வீரர்களில் ஒருவராக உருவெடுக்கிறார். ரவீந்திர ஜடேஜா இல்லாத இடத்தை அவர் நிரப்புகிறார்,” என்றார்.

இப்போது இந்திய அணி பைனலில் நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி ஆமதாபாத்தில் நடைபெற உள்ளது. சொந்த மண்ணில் உலகக் கோப்பை பைனலில் விளையாடுவதற்கு மிகுந்த உற்சாகமாக உள்ளதாக அக்சர் படேல் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் முன்னிலையில் இந்தியா கோப்பையை கைப்பற்றும் என்ற நம்பிக்கை அணியில் அதிகரித்துள்ளது.

Open full site