செய்திகள் • January 31, 2026

சென்னை பீஹார் குடும்ப கொலை: இளம்பெண் மீது பாலியல் வன்கொடுமை இல்லை – பிரேத பரிசோதனை அறிக்கை

சென்னையில் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த குடும்பம் கொல்லப்பட்ட சம்பவத்தில், இளம்பெண் முனிதா குமாரி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகவில்லை என முதல்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீஹார் மாநிலம் ஷேக்பூரா மாவட்டத்தைச் சேர்ந்த கவுரவ் குமார் (24), அவரது மனைவி முனிதா குமாரி (20) மற்றும் 2 வயது மகன் பிர்மானி குமார் ஆகியோர் வேலை தேடி சென்னைக்கு வந்திருந்தனர். கடந்த மாதம் 26ஆம் தேதி, அடையாறு இந்திரா நகர் பகுதியில், கவுரவ் குமாரின் உடல் சாக்கு மூட்டையில் ரத்தக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் அடையாறு போலீசார் நடத்திய விசாரணையில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர் எனும் சத்யேந்தர் (30), லலித் யாதவ் (40) மற்றும் விகாஷ் குமார் (24) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள், கவுரவ் குமாருடன் சேர்த்து அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தையையும் கொலை செய்து, உடல்களை வெவ்வேறு இடங்களில் வீசியது தெரியவந்தது.

குழந்தையின் உடல் மத்திய கைலாஷ் ரயில்வே பாலம் அருகே உள்ள பகிங்ஹாம் கால்வாயிலும், முனிதா குமாரியின் உடல் பெருங்குடி குப்பை மேட்டிலும் மூன்று நாட்களுக்குப் பின் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள், முனிதா குமாரியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும், அவர் எதிர்த்ததால் கணவர், குழந்தை மற்றும் அவரை கொலை செய்ததாகவும் போலீசில் வாக்குமூலம் அளித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, முனிதா குமாரியின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உதவி பேராசிரியர்கள் சிவகுமார் மற்றும் ரகுராம் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட பரிசோதனையில், பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கான எந்த தடயமும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தலையில் இரும்பு கம்பியால் பலமாக தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயமே, முனிதா குமாரியின் உயிரிழப்பிற்கு முதன்மை காரணம் என முதல்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Open full site