வரும் 16ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை, தலைநகர் டில்லியில் மிகப்பெரிய அளவில் செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து அமைச்சர்கள், அரசு தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டில் இதுவரை 35 ஆயிரம் பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. 100 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் 15 முதல் 20 அரசுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உலகம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 40 முக்கிய ஏ.ஐ. தொழில்நுட்ப வல்லுநர்கள், சுமார் 500 தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டிற்கு வருபவர்கள் மற்றும் அவர்களுடன் வருவோரைக் கணக்கில் எடுத்தால், மொத்தமாக 35 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, டில்லியில் ஹோட்டல் அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ‘இக்சிகோ’ (Ixigo) என்ற டிராவல் இணையதளத்தின் தலைமை செயல் அதிகாரி அலோக் பாஜ்பாய் கூறுகையில், “மாநாட்டை முன்னிட்டு, டில்லியில் ஹோட்டல் கட்டணங்கள் விண்ணைத் தொடத் துவங்கியுள்ளன” என தெரிவித்தார்.
இதற்கு முன், ஒரு இரவு தங்குவதற்கு 20,000 முதல் 40,000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மத்திய டில்லியில் உள்ள சில ஹோட்டல்களில் ஒரு நாள் தங்குவதற்கான கட்டணம் 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
முக்கியமான ஹோட்டல்களான தி லீலா பேலஸ், ஐ.டி.சி. மவுர்யா, தாஜ் பேலஸ் உள்ளிட்டவற்றில் அறைகள் இப்போதே முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மத்திய டில்லி பகுதியில் உள்ள தி இம்பீரியல், சங்ரி லா எராஸ், தி பார்க் ஹோட்டல் போன்ற ஹோட்டல்களில் அறைகளே கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.