புதுடில்லி:
டிஆர்டிஓ விஞ்ஞானிகளின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், அறிவியல் சார்ந்த கடுமையான முயற்சிகளும் இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, தன்னம்பிக்கை கொண்ட பாரதத்தை உருவாக்குவதற்கும் முக்கிய பங்காற்றுகின்றன என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான (DRDO) டிஆர்டிஓ, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் முக்கிய ஆய்வு நிறுவனமாகும். ஆயுதங்கள், ஏவுகணைகள், விமானங்கள் மற்றும் போர்வாகனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் டிஆர்டிஓ முக்கிய பங்கு வகிக்கிறது.
டிஆர்டிஓவின் 68வது நிறுவன தினத்தையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து விஞ்ஞானிகள், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்த ராஜ்நாத் சிங், எதிர்காலத்திற்கு தேவையான நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம் பாதுகாப்பு படைகளின் நம்பிக்கையை டிஆர்டிஓ மேலும் வலுப்படுத்தி வருவதாகக் கூறினார்.
தேசத்திற்கு தொடர்ச்சியான சேவையுடன் கூடிய சிறப்பான ஆண்டு அமைய வேண்டும் எனவும் அவர் வாழ்த்தினார்.