சென்னை: திமுக தான் காங்கிரசிடம் அடிமையாக இருக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
அதிமுகவிலும் திராவிட மாடல் உள்ளது. அதனால் தான் கட்சி வலுவாக உள்ளது. இலவச திட்டங்கள் அதிமுக மட்டுமல்லாது நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. திமுக தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கையும் நிறைவேற்றவில்லை. இதனால் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுள்ளோம். ஆனால் இதுவரை அதற்கான பதில் கிடைக்கவில்லை.
கடன் வாங்குவதில் இந்தியாவில் முதலிடம் பிடித்த மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக திமுக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மக்கள் ஏற்கவில்லை. கருணாநிதி குடும்பத்தில் பிறந்ததால்தான் அந்த பதவி கிடைத்தது.
முதல்வர் ஸ்டாலின் எங்கு அழைத்தாலும் பொதுவிவாதத்திற்கு நான் தயாராக உள்ளேன். நானும் முதல்வரும் ஒரே காலகட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள். ஆனால் என் அரசியல் பாதை வேறு; ஸ்டாலின் பாதை வேறு.
தேஜ கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என மக்கள் முடிவு செய்துள்ளனர். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
அதிமுக பாஜகவிடம் அடகு வைக்கப்படவில்லை. 2024ஆம் ஆண்டு அதிமுக தனித்துப் போட்டியிட்டது. திமுக தான் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளது.
சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் தொடர்பான பிரச்சினை முடிவுற்றது. அவர்களுக்கு கட்சியில் இடமில்லை. தினகரனுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் தற்போது சரியாகிவிட்டன.
விஜய் குறித்து பேசும்போது, சினிமாவில் அவர் சூப்பர் ஸ்டார். ஆனால் அரசியலில் அல்ல. எம்ஜிஆர் பெயரை பயன்படுத்தியே கட்சி நடத்த வேண்டிய நிலை உள்ளது. தவெக இன்னும் ஒரு தேர்தலையும் சந்திக்கவில்லை. தேர்தலை சந்தித்தால் தான் அவர்களின் வாக்கு வலிமை தெரியும்.
வலிமையான மற்றும் வளமான பாரதம் உருவாக இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் எனவும் இபிஎஸ் கூறினார்.