செய்திகள் • January 18, 2026

டிரம்ப் மிரட்டலுக்கு பதிலடி : அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இடைநிறுத்திய ஐரோப்பிய யூனியன்

வாஷிங்டன் :
கிரீன்லாந்தை அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வரும் சூழலில், அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) அறிவித்துள்ளது.

ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க்கின் பகுதியாக இருந்தாலும் தன்னாட்சி நிர்வாகம் பெற்றுள்ளது. கனிம வளங்கள் மற்றும் மூலோபாய முக்கியத்துவம் கொண்ட இந்த தீவை கைப்பற்ற வேண்டும் என்பதே டிரம்பின் வாதமாக இருந்து வருகிறது.

ஆர்டிக் பிராந்தியத்தில் ரஷ்யா மற்றும் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்த கிரீன்லாந்து அமெரிக்க கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என டிரம்ப் கூறி வந்தார். இதற்கு எதிராக, நேட்டோவில் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய நாடுகள் ஒன்றுபட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கிரீன்லாந்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய நாடுகள் தங்கள் படைகளை அங்கு அனுப்பியுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்தார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தத்தை, தற்போதைய சூழ்நிலை காரணமாக இடைநிறுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. இனி அந்த ஒப்பந்தத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படாது என ஐரோப்பிய மக்கள் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த அணுகுமுறை இருதரப்பு உறவுகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என ஐரோப்பிய யூனியன் தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Open full site