செய்திகள் • January 08, 2026

தெற்காசிய அமைதிக்கு இந்தியாவின் தலைமையே தீர்வு – நமல் ராஜபக்சே கருத்து

தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் ஏற்பட இந்தியாவின் தலையீடு மற்றும் தலைமையே முக்கிய பங்கு வகிக்கிறது என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகனுமான நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் வங்கதேசம், நேபாளம், இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் அரசியல் குழப்பங்கள், மக்கள் போராட்டங்கள் மற்றும் ஆட்சி மாற்றங்களை எதிர்கொண்டுள்ளன. இந்நிலையை சுட்டிக்காட்டி, சமூக வலைதளத்தில் நமல் ராஜபக்சே நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: பயங்கரவாதம், பொது அமைதியின்மை, அரசியல் வன்முறை போன்ற சவால்கள் தெற்காசியாவை பாதித்து வருகின்றன. இவற்றை எதிர்கொள்ள பிராந்திய அளவில் வலுவான ஒத்துழைப்பு அவசியமாக உள்ளது. பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துதல், அரசியல் வன்முறையைத் தடுத்தல், சிறுபான்மையினர் உரிமைகளை பாதுகாத்தல் ஆகியவை நாடுகள் இணைந்து செயல்பட வேண்டிய விடயங்களாகும்.

இந்த ஒத்துழைப்பில் இந்தியாவின் தலைமையும் பங்களிப்பும் மிகவும் முக்கியமானதாகும். இந்தியா முன்வந்து செயல்பட்டால் மட்டுமே தெற்காசியாவில் அமைதி, ஒற்றுமை மற்றும் பொருளாதார வளர்ச்சி நிலைபெறும் என்று நமல் ராஜபக்சே வலியுறுத்தியுள்ளார்.

இந்த கருத்துகள், இந்தியா–இலங்கை உறவுகள் சமீப காலமாக வலுவடைந்து வரும் சூழலில் வெளியாகியுள்ளன. 2022ஆம் ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது இந்தியா நிதி உதவி மற்றும் கடன் வசதிகளை வழங்கியது. அதேபோல், கடந்த ஆண்டு டிட்வா புயல் பாதிப்பின்போதும் இந்தியா இலங்கைக்கு குறிப்பிடத்தக்க உதவிகளை செய்தது குறிப்பிடத்தக்கது.

Open full site