ஆமதாபாத்: டி-20 உலக கோப்பையின் 10வது சீசனில் இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. சொந்த மண்ணில் டி-20 உலக கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. மேலும் தொடர்ச்சியாக இரண்டு முறை (2024, 2026) கோப்பை வென்றதுடன், மொத்தம் மூன்று முறை (2007, 2024, 2026) டி-20 உலக கோப்பை கைப்பற்றிய முதல் அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது.
இந்த வெற்றியை தொடர்ந்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்த்துச் செய்தியில், இந்திய அணி தொடக்கம் முதல் இறுதி வரை சிறப்பாக விளையாடி இந்த கோப்பையை வெல்ல தகுதியானது என்று கூறினார். மும்பை மட்டுமல்லாமல் உலகின் பல பகுதிகளில் இந்தியாவின் இந்த வெற்றி கொண்டாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, இந்திய அணி மிகவும் வலிமையான அணியாக திகழ்ந்தது என்றும் முக்கிய போட்டிகளில் சிறப்பாக விளையாடியது என்றும் பாராட்டினார்.
விராட் கோலி, ஆமதாபாத்தில் கிடைத்த இந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டின் பெருமையை உயர்த்துவதாக கூறினார். கடினமான சூழ்நிலையில் கூட வீரர்கள் மனம் தளராமல் போராடியதை அவர் பாராட்டினார்.
யுவராஜ் சிங், நடப்பு சாம்பியன் அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்ட இந்திய அணியின் திறமையை பாராட்டினார். இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் மற்றும் அபிஷேக் ஆகியோர் சிறப்பாக ரன்கள் எடுத்ததை குறிப்பிட்டார்.
ஹர்பஜன் சிங், தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி மீண்டும் கோப்பையை வென்ற இந்திய அணியை நினைத்து பெருமை கொள்கிறேன் என்று கூறினார்.
கிரிக்கெட் விமர்சகர் ஆகாஷ் சோப்ரா, “வரலாறு தொடர்ந்தது, வரலாறு முறியடிக்கப்பட்டது, புதிய வரலாறு உருவாக்கப்பட்டது” என்று தனது கருத்தை பகிர்ந்தார்.
2007ஆம் ஆண்டு இந்தியாவுக்கு முதல் டி-20 உலக கோப்பையை வென்று தந்த முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஆமதாபாத்தில் இந்திய அணி மீண்டும் வரலாறு படைத்துள்ளதாக கூறினார். உலகம் முழுவதும் உள்ள இந்திய ரசிகர்களுக்கும் அணியினருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். மேலும் பும்ரா ஒரு சாம்பியன் பவுலர் என்றும் அவர் பாராட்டினார்.