அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் மேற்காசிய நாடான ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதற்கு பதிலடியாக ஈரான், மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் கூட்டணி இலக்குகளை தாக்கியுள்ளது.
தொடர்ந்து ஆறாவது நாளாக மேற்காசிய நாடுகளில் மோதல்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இரு தரப்பும் தாக்குதல் நடத்துவதால் பல நாடுகள் பாதிப்பை சந்தித்துள்ளன.
வான்வழிகள் பல இடங்களில் மூடப்பட்டதால் சர்வதேச விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போரின் தாக்கம் ஈரான், இஸ்ரேல், லெபனான், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சிரியா, ஈராக், ஜோர்டான், சவுதி அரேபியா, எகிப்து, கத்தார், ஓமன், சைப்ரஸ், துருக்கி மற்றும் இலங்கை ஆகிய 16 நாடுகளுக்கு பரவியுள்ளது.
ஈரானில் மட்டும் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லெபனானில் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பல நாடுகளில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக எண்ணெய் கப்பல்கள் மற்றும் கடல்சார் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் மேலும் விரிவடைந்தால் உலக பொருளாதாரத்துக்கும் பெரிய பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.