செய்திகள் • October 25, 2018

மதுரை - மூணாறு தேசிய சாலை மேம்பாட்டுத்திட்டம்

மதுரை -- மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் மூன்று பைபாஸ் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதனால், பயண நேரம் குறையும். சுற்றுலா செல்பவர்கள் நெரிசல் இல்லாமல் 'மின்னல்' வேகத்தில் வாகனங்களில் பறக்கலாம். மத்திய அரசின் 'பாரத்மாலா பரியோஜனா' திட்டத்தின்படி சுமார் 660 கோடி ரூபாய் செலவில், மதுரை - மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்.85) போக்குவரத்து மேம்படுத்தப்பட உள்ளது. இதற்காக புதிதாக 45 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்படும். இதனால் மதுரை-மூணாறு இடையே தற்போதைய பயண நேரத்தில் 45 நிமிடங்கள் குறையும். இத்திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் விரைவில் ஆண்டி பட்டி - உசிலம்பட்டி இடையே 29 கி.மீ., மற்றும் தேனி - போடி இடையே 16 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்படும்.
தவிர போடி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டியில் தலா 4 முதல் 5 கி.மீ., துாரத்திற்கு 3 பைபாஸ் சாலைகள் அமைக்கப்படும். இந்த ஒவ்வொரு நகரத்தையும் கடக்க 15 முதல் 20 நிமிடங்கள் தேவைப்படுகிறது. இப்பணிகள் முடிந்தால், தற்போதைய நேரம் மூன்றில் ஒரு பங்காக குறையும். தரையில் கேபிள் பதித்தல், நீரை வெளியேற்றுதல், ஓட்டல், வாகன பார்க்கிங், ஓய்வறை போன்ற பணிகளுக்காக 260 எக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும். ஒன்பது சிறிய பாலங்கள், இரண்டு ரயில்வே மேம்பாலங்கள், 52 வாய்க்கால் மேம்பாலங்கள் கட்டப்படும்.என்.எச். 85ல் நான்கு வழிச்சாலை அமைக்காத பகுதிகளை கணக்கிடும் பணிகள் ஏற்கனவே துவங்கி விட்டன. இன்னும் 3 மாதங்களில் இப்பணிகள் நிறைவடையும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்திற்கான டெண்டர் 2019 மார்ச்சில் அறிவிக்கப்படவுள்ளது. 2019 இறுதிக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Open full site