சென்னை:
குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பிறந்த குழந்தைகளின் நஞ்சுக்கொடிகளில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கண்டறியப்பட்டதாக வெளியான செய்திகளை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி. பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
வழக்கு விசாரணையின்போது, மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வே. சந்திரசேகரன், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) தயாரித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில், ஹிமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான், சண்டிகர், ஹரியானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஆய்வு செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களின் மாதிரிகளில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பொதிந்து விற்கப்படும் உப்பு மற்றும் சர்க்கரையிலும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உடல் நலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், ஆய்வுகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை பார்வையிட்ட நீதிபதிகள், குடிநீர் பாட்டில்களில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறும்படி உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.