புதுடில்லி: ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க் (ஆர்.எஸ்.எஸ்.) தலைவர் மோகன் பாகவத் பேசியதாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ பதிவு முற்றிலும் போலியானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அந்த வீடியோவில், “நம் ராணுவத்தில் ஹிந்துக்கள் அல்லாதோரை 2028ஆம் ஆண்டுக்குள் நீக்காவிட்டால், பிரதமர் மோடி பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டு, அந்த இடத்தில் யோகி ஆதித்யநாத் அமர்த்தப்படுவார்” என மோகன் பாகவத் பேசியதாகக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும், “நம் ராணுவத்தை காவிமயமாக்க வேண்டும்” என்ற கருத்தும் அதில் சேர்க்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) தனது உண்மை கண்டறியும் குழு மூலம் அந்த வீடியோவின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில், சமூக வலைதளங்களில் பரவியுள்ள அந்த வீடியோ டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு, வதந்தி பரப்பும் நோக்கில் உருவாக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டது.
PIB வெளியிட்டுள்ள விளக்கத்தில், “ராணுவத்தில் உள்ள ஹிந்துக்கள் அல்லாத 50 சதவீத வீரர்களை நீக்குமாறு பிரதமர் மோடிக்கு வலியுறுத்துவதாக வெளியான வீடியோ முழுக்க முழுக்க போலியானது. அதில் எந்த உண்மையும் இல்லை” எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் இத்தகைய போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேண்டுமென்றே பரப்பப்படுகின்றன என்றும், அவற்றை பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய தகவல்கள் பரவினால் உடனடியாக அரசுக்கு தெரிவிக்குமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மத்திய பட்ஜெட்டுடன் தொடர்புடையதாக ‘ஸ்கேன்’ செய்யப்பட்ட ஆவணங்கள் Telegram செயலியில் வெளியானதாக கூறப்பட்ட புகைப்படங்களும் போலியானவை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.