செய்திகள் • March 04, 2026

நகராட்சி துறை நியமன முறைகேடு: வழக்கு பதிவு உத்தரவுக்கு எதிராக மறுஆய்வு மனு

சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2024-25 ஆண்டுகளில் நடைபெற்றதாக கூறப்படும் பணி நியமன முறைகேடு விவகாரம் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.

அமைச்சர் கே.என்.நேரு துறையில் உதவி மற்றும் இளநிலை பொறியாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்களில் நியமனம் வழங்க லஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, அமலாக்கத் துறை கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பி, ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய கோரியது.

இதனைத் தொடர்ந்து, மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் மற்றும் அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த மாதம் 20ஆம் தேதி உத்தரவிட்டது.

ஆனால், நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 10 நாட்கள் கடந்தும் வழக்குப் பதிவு செய்யாததால், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்பதுரை தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், உடனடி வழக்குப் பதிவு உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.

Open full site