2016 ஆண்டுக்கு முன்பு இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் அதாவது (surgical strike) நடத்தியதற்கான தகவல் இல்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரை சார்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விக்கு இந்த பதிலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது .
பாகிஸ்தானின் எல்லைக்கு உள்ளே சென்று இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடவடிக்கையை மோடி அரசு அரசியல் ஆக்குவதாக குற்றம் சாட்டியது காங்கிரஸ் கட்சி.
காங்கிரஸ் கட்சி மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் 6 முறை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டதாக அறிவித்தது.இதற்கான தேதி பட்டியலையும் கூட காங்கிரஸ் வெளியிட்டது. மன்மோகன் சிங் அளித்த ஒரு பேட்டியில் கூட தங்கள் ஆட்சியிலும் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ரோஹித் சவுத்ரி என்பவர் 2004 ஆம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை நடைபெற்ற துல்லிய தாக்குதல் குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தார்.
இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஒரு சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டதாக ஆவணம் இருப்பதாகவும், அதற்கு முன்பாக துல்லிய தாக்குதல் நடைபெற்றதற்கான எந்த ஆவணமும் தங்களிடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.