புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட சுரங்கத் துறை அதிகாரியின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 4.27 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
ஒடிசாவின் கட்டாக்கில் சுரங்கத் துறையில் துணை இயக்குநராக பணியாற்றி வந்த தேபப்ரதா மொஹந்தி, நிலக்கரி சுரங்கங்களுக்கு உரிமம் வழங்குவதில் முக்கிய அதிகாரியாக இருந்தார். சுரங்க உரிமம் வழங்க அவரது கையெழுத்து அவசியம் என்பதால் அவர் செல்வாக்கு மிக்க அதிகாரியாக கருதப்பட்டார்.
சமீபத்தில், நிலக்கரி சுரங்க உரிமம் கோரி விண்ணப்பித்த ஒருவரிடம் 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அந்த நபர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் அளித்தார்.
அதிகாரிகளின் திட்டமிட்ட நடவடிக்கையின்படி, லஞ்சத் தொகை வழங்கும் போது தேபப்ரதா மொஹந்தி கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 1.20 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புவனேஸ்வரில் உள்ள அவரது இல்லம், பத்ராக் மாவட்டத்தில் உள்ள பெற்றோர் வீடு மற்றும் அலுவலகத்தில் விரிவான சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது பைகள், அலமாரிகள் உள்ளிட்ட இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
முதற்கட்ட தகவலின்படி, மொத்தமாக 4.27 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் யஷ்வந்த் ஜெத்வா தெரிவித்ததாவது, தேபப்ரதா மொஹந்தி மீது ஏற்கனவே பல லஞ்ச புகார்கள் நிலுவையில் உள்ளன. மேலும் 2009ஆம் ஆண்டில் அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் கூறினார்.
ஒடிசா மாநில வரலாற்றில், ஊழல் வழக்கில் இதுவரை இல்லாத அளவில் அதிக பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.