ரூ.20 லட்சம் வரை மதிப்புள்ள சொத்து பதிவுகளுக்கு இனி பான் (PAN) எண் கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு விதிகளை மாற்றியுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் பொதுமக்களுக்கு சொத்து பதிவு செயல்முறை எளிமையாகும் என கூறப்படுகிறது.
முன்பு சொத்து வாங்குதல் அல்லது விற்பனை போன்ற நடவடிக்கைகளில் பான் எண் அவசியம் இருந்தது. ஆனால் தற்போது பெரும்பாலான மக்கள் ஆதார் அட்டை வைத்திருப்பதால், அதையே முக்கிய அடையாளமாக பயன்படுத்த முடியும் என்று அரசு கருதுகிறது.
ஏற்கனவே பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பெரும்பாலானோர் அதை நிறைவு செய்துள்ளனர். இதனால் பல சேவைகளில் பான் எண்ணுக்கு பதிலாக ஆதார் எண்ணை பயன்படுத்தும் நடைமுறை அதிகரித்து வருகிறது.
வருமான வரி தாக்கல் செய்யும் போது பயன்படுத்தப்படும் ITR-2 மற்றும் ITR-3 படிவங்களிலும், பான் எண் இல்லாதவர்களுக்கு ஆதார் எண்ணை பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள், வயதானவர்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு இது உதவியாக இருக்கும்.
மேலும், பொதுமக்களின் ஆதார், பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, வங்கி பாஸ்புக், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற அனைத்து அரசு ஆவணங்களிலும் ஒரே மாதிரியான பெயர் இருக்க வேண்டும் என்ற தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பலருக்கு வெவ்வேறு ஆவணங்களில் பெயர் மாறுபடுவதால் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதை சரி செய்ய அரசு விண்ணப்பப் படிவங்களில் First Name, Middle Name, Last Name போன்ற பிரிவுகளை நீக்கி, ஒரே இடத்தில் முழுப் பெயரை பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆலோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால், சொத்து பதிவு மற்றும் அரசு சேவைகளில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.