செய்திகள் • November 19, 2025

ஜனாதிபதியின் 14 கேள்விகள்: இன்று தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்

மசோதாக்கள் மீது முடிவெடுக்க, கவர்னர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு கால வரம்பு நிர்ணயம் செய்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.


தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக கூறி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதை விசாரித்த நீதிமன்றம், 'மசோதாக்கள் மீது ஒரு மாதத்தில் இருந்து மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்' என, கவர்னர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு வரம்பு நிர்ணயித்து தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பு குறித்து, 14 கேள்விகளை எழுப்பிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தையே வழக்காக மாற்றிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய், இதன் மீது ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என அறிவித்தார்.

அதன்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்தது.

கடந்த செப்., 11ல் விசாரணை முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.

Open full site