செய்திகள் • December 19, 2018

பிரார்த்தனை என்ற பெரும் செல்வம்!

'தினமலர்' சேது

அம்மாவின் குளியலறையில் இருந்த எக்சாஸ்ட் ஃபேன் சில நாட்களாக ஓடவில்லை. எலக்ட்ரிஷியன் பாரதியை அழைத்திருந்தோம். அவர் வந்து விசிறியின் பிரேமை கழற்றினார். அங்கே தேங்காய் நார்களால் பின்னப்பட்ட ஓர் கூடு. விசிறியில் ஏற்பட்ட திடீர் அசைவினால் சரேலேன ஒரு அணில் அங்கிருந்து ஓடியது. ‘‘கூட்டில மூணு அணில் குஞ்சுகள் இருக்கு சார். இன்னும் கண்ணுகூட திறக்கல…’’ ஹாலில் இருந்த அம்மா, அறைக்குள் வந்தார்… ‘‘என்னது அணில் குஞ்சுகள் இருக்கா?. வேணாம், ஒன்னும் பண்ணாதீங்க. விட்டுருங்க’’ ‘‘இல்லம்மா, இங்க இருந்து அப்படியே பத்திரமா எடுத்து மூணு குஞ்சுகளையும் கூட்டோட மொட்டை மாடில வச்சுருறேன். இல்லைனா, பால்கனியில வச்சுருறேன். அதோட தாய் பார்க்கணும். இல்லைனா கஷ்டம்…’ பாரதியின் யோசனையை 6 குழந்தைகளுக்கு தாயான அம்மா ஏற்கவில்லை. ‘‘வேணாம் தம்பீ, குஞ்சு இருக்கும்போது கூட்டை கலைக்காதீங்க. அப்படியே இருக்கட்டும் விட்டுருங்க…’ பதறினார் அம்மா. வேளாவேளைக்கு உணவு தந்து குஞ்சுகளை ஆளாக்கும் பாசம் அவள் மட்டுமே அறிந்தது. ‘‘ஒரு வாரத்தில இந்த குஞ்சுகள் நடக்க பழகிடும். கூட்டை விட்டு வெளியிறிடும். அப்புறம்கூட எடுத்திடலாம்…’’ –பாரதியின் யோசனை பற்றி பின்னர் பார்ப்போம் என விட்டுவிட்டோம். கூட்டில் கை வைக்காமல், மறுபடியும் விசிறியின் பிரேமை பொருத்தினார். சில நிமிட நிசப்தத்துக்குப்பிறகு, தாய் அணில் மீண்டும் கூட்டை நெருங்கியது. முகப்பேரில் இருந்து இதற்காக மாம்பலம் வந்திருந்தார் பாரதி. ‘‘எவ்வளவு வேணும் பாரதி…’ ‘‘அதான் ஒரு வேலையும் பண்லீயே சார். பணம் எதுவும் வேணாம்’’ ‘‘பெட்ரோலுக்காகவாவது வச்சுக்கங்க…’’. நான் தந்த நுாறு ரூபாயையும் மறுத்துவிட்டு எதுவும் வாங்காமல் புன்னகையுடன் புறப்பட்டார். பாரதி எப்பவும் இப்படித்தான். எந்த பேராசையும் அற்றவர். கொஞ்ச நாளாகவே தாய் அணில் வீட்டில் இருந்த கால் மிதி, துண்டுகள் எல்லாவற்றையும் கத்தரித்து கொண்டு போய்க்கொண்டிருந்தது, குஞ்சுகளின் கதகதப்புக்காத்தான் என்பது இப்போதுதான் புரிந்தது. அடுப்படி வரைக்கும் வந்து கீச்சிடும். உணவு இருக்கிறதா என இரை தேடும். கூடு கட்ட இடமில்லாமல், எக்சாஸ்ட் ஃபேன் ஒயரை கடித்து அதன் இயக்கத்தை நிறுத்தியபின், அசையாமல் நின்றுபோன் இறக்கைகள் இடையில் கூடு கட்டி இருக்கின்றன. நகரங்களின் கான்க்ரீட் காடுகளுக்கு நடுவே வசிக்கவும், புசிக்கவும்கூட சிறு விலங்குகளும், பறவைகளும் சிரமப்படுவதை பார்க்கும்போது நெஞ்சு கலங்கத்தான் செய்கிறது. மதிய வேளைகளில், டிபன் பாக்ஸ் திறந்து வைத்து தயிர்சாதம் சாப்பிட தொடங்கினால் எதிரே இருக்கும் திண்டு சுவற்றில் ஏழெட்டு காகங்கள் என்னையே பார்த்தபடி இருக்கும். 4 ஸ்பூன் அவற்றுக்கென தனியே எடுத்து வைத்து உண்ணத் தொடங்குவேன். கொஞ்ச நேரம் சென்றும், தயிர்சாதம் எடுத்தவைக்கும் அசைவு என்னிடம் இல்லையென்றால், அருகில் வந்து சில காகங்கள், கரையத் தொடங்கும். பசியோடு கசியின் அதன் குரல் கேட்டும் நம்மால் தயிர்சாதம் விழுங்க முடியாது. அரை டிபன் பாக்ஸ் தயிர்சாதத்தையும் கவிழ்த்து வைத்தால், தான் மட்டும் உண்ணாமல், பெரும் குஷியுடன் அந்த காகங்கள் கரைந்து, தன் கூட்டத்தையை கூப்பிடும். அன்பர் ஒருவர் சொன்னார்: இப்படி சோறு போட்டு அதை சோம்பேறியாக்காதீங்க. பறவைகள் தானே தேடிச்சென்று இரைதேடும். ஞாயிறு மாலை பட்டினப்பாக்கம் சென்றிருந்தேன். அதன் நுழைவாயிலில் இருந்த குப்பை மேட்டில் மனிதர்கள் கொட்டி வைத்திருந்த பாலித்தீன் கழிவுகளுக்கு மத்தியில் காகங்கள், சில நாரைகள், ஒரு நாய் தங்களுக்கான உணவை தேடிக்கொண்டிருந்தன. தினமும் வயிறார எனக்கு உணவிடும் இறைவன்தானே இந்த ஜீவன்களின் பசிக்கும் பொறுப்பு?. வலியிலும் வலிப்பது, மற்றவர் கஷ்டம் உணர்ந்தும் உதவ முடியாத நிலையில் இருப்பது. அப்போதெல்லாம் என்னை ஆற்றுப்படுத்துவதும், ஆறுதல் தருவதும், பிரார்த்தனைகள்!. பிரார்த்தனை என்ற பெரும் செல்வம்தான் மனதின் வலியை போக்குகிறது. துன்பப்படுபவர்களின் துயர் நீங்க மனம் கனிய பிரார்த்தனை செய்வதே சந்தோஷமாக இருக்கிறது. நேற்றும் அதைத்தான் செய்ய முடிந்தது… திரைப்படங்கள்போல், வாழ்க்கை பயணத்திலும் ‘இடைவேளை’க்குப் பிறகுதான் வாழ்வின் சூட்சமங்கள் அவிழ்கின்றன. இப்போதெல்லாம் வலிகள் வலிப்பதில்லை.

Open full site