செய்திகள் • February 22, 2026

திருப்பூரில் கைது செய்யப்பட்ட 6 வங்கதேசத்தினர் – நாடு முழுவதும் தாக்குதல் திட்டம் அம்பலம்

திருப்பூர்: திருப்பூரில் கைது செய்யப்பட்ட 6 வங்கதேசத்தினர் நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது டில்லி போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

திருப்பூரில் வடமாநிலத்தினர் போர்வையில் ஊடுருவியுள்ள வங்கதேசத்தினரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து கைது செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகவும், பாதுகாப்பு படையினரை அச்சுறுத்தும் வகையிலும் டில்லியில் சமீபத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

அந்த போஸ்டர் ஒட்டியவருக்கும், திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தினருக்கும் தொடர்பு இருப்பது குறித்து டில்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டில்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில், இரண்டு எஸ்.ஐ.க்கள் உள்ளிட்ட 7 பேர் கொண்ட தனிப்படை கடந்த சில நாட்களாக திருப்பூரில் முகாமிட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டது.

அம்மாபாளையத்தில் ஒருவர், பல்லடத்தில் மூன்று பேர் மற்றும் ஊத்துக்குளியில் இருவர் என மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள்: மிஜனூர் ரகுமான் (33), முகமது சாபேட் (35), உமர் (32), முகமது லிட்டன் (40), முகமது ஜாகீத் (40) மற்றும் முகமது உஜால் (29).

அவர்களை திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, ஜே.எம்-3 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, கோவை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் டில்லிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

டில்லி போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், இந்த 6 பேரும் நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து மொபைல் போன்கள் மற்றும் போலியான ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட இந்திய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Open full site