செய்திகள் • January 26, 2026

அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல்: 15 கோடி மக்கள் பாதிப்பு, 20 மாநிலங்களில் அவசர நிலை

அமெரிக்காவின் பல பகுதிகளில் கடும் உறைபனி மற்றும் பனிப்புயல் தாக்கம் ஏற்பட்டு, நாட்டின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஓகியோ பள்ளத்தாக்கு, மத்திய தெற்கு மாநிலங்கள் முதல் நியூ இங்கிலாந்து வரை கனமழை மற்றும் பனிப்பொழிவு தொடர்கிறது. இயல்பை விட அதிகமாக குளிர் நிலவுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

நியூயார்க், பிலடெல்பியா, பாஸ்டன், சிகாகோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சாலைகள் முழுவதும் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளன. குடியிருப்புகள், வாகனங்கள், பாலங்கள் என அனைத்தும் உறைபனியால் பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இந்த கடும் பனிப்பொழிவு காரணமாக அமெரிக்காவில் சுமார் 15 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு 20 மாநிலங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சில பகுதிகளில் இரண்டு அடி உயரம் வரை பனி படர்ந்து காணப்படுகிறது.

டெக்சாஸ், ஒக்லஹாமா உள்ளிட்ட மாநிலங்களில் ராட்சத இயந்திரங்கள் மூலம் பனி அகற்றும் பணிகள் இரவு பகல் பாராமல் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில், அட்லாண்டா, பாஸ்டன், சிகாகோ போன்ற முக்கிய நகரங்களில் விமான நிலையங்கள் முடங்கியுள்ளதால், 14,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க தேசிய வானிலை ஆய்வு மையம், ஆபத்தான குளிர், கடும் உறைபனி மற்றும் பனிப்புயல் இன்னும் சில நாட்கள் தொடரக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Open full site