இந்தியா 93 ரன்கள் வெற்றி: இஷான் கிஷான் அதிவேக அரைசதம் – டி20 உலகக்கோப்பையில் நமீபியா சரிவு
டி20 உலகக்கோப்பை தொடரில் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி நமீபியாவை 93 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற நமீபியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அதிரடியாக தொடங்கினார். தொடர்ந்து இஷான் கிஷான் சிக்ஸர் மழை பொழிந்து 20 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். அவர் 24 பந்துகளில் 61 ரன்கள் (5 சிக்ஸர், 6 பவுண்டரி) குவித்தார்.
இதன் மூலம் டி20 உலகக்கோப்பையில் அதிவேக அரைசதம் அடித்த 5வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும், இந்த தொடரில் அரைசதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் படைத்தார்.
ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 20 ஓவர்களில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.
210 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணி 18.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இந்த வெற்றியால் இந்தியா குரூப் A பிரிவில் 2 போட்டிகளில் 2 வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.