சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
டி.வி. நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் தற்கொலை அவரது குடும்பத்தினர் மட்டும் அல்லாமல் சின்ன திரையை சேர்ந்தவர்கள் மற்றும் பொது மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். நடிகை சித்ரா, ஹேம்நாத் என்பவரை காதலித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கும், ஹேம்நாத்க்கும் பதிவு திருமணம் நடந்தது.
இந்த திருமணத்தில் சித்ராவுக்கும், அவரது தாய் விஜயாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. சித்ரா தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் கணவர் ஹேம்நாத் விடுதிக்கு வெளியில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் உடலில் ரத்த காயங்கள் இருந்துள்ளது. கணவர் ஹேம்நாத் சித்ராவிடம் சண்டை போட்டு விடுதி அறையை விட்டு வெளியே போன பிறகு சித்ரா தற்கொலை செய்துகொண்டாரா? என போலீசார் விசாரணை.
திருவான்மியூரில் வீடு கட்டவும், புதிதாக கார் ஒன்றை வாங்குவதற்கு சித்ரா கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு எதுவுமே இல்லை என்பதால் சித்ராவுக்குக் கடன் நெருக்கடி அதிகரித்துள்ளது. படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தவுடன், தனக்கு வந்த வாய்ப்புகள் அனைத்திலுமே சித்ரா ஓய்வின்றி நடிக்கத் தொடங்கியுள்ளார்.
ஒருபுறம் கடன் பிரச்சினையால் மன அழுத்தம் ஏற்பட்டபோது, இன்னொரு புறம் திருமணத்தில் பிரச்சினை எழுந்துள்ளது. பிரம்மாண்டமாகத் திருமணத்தை நடத்த வேண்டும், திரையுலகினரை அழைக்க வேண்டும் என்றெல்லாம் சித்ரா திட்டமிட்டுள்ளார். அதற்குக் கணவரிடமிருந்து எந்தவொரு உதவியுமே கிடைக்காதபோது மன அழுத்தம் அதிகமாகியுள்ளது.
கடைசியாக மீண்டும் ஹேம்நாத் – சித்ரா இருவருக்கும் படப்பிடிப்புத் தளத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது. பின்னர் ஹோட்டல் அறைக்கு வந்த பின்னரும் வாக்குவாதம் முற்றியிருந்தது. நான் உங்களை நம்பியே இருப்பதாக சித்ரா கூறியதற்கு, ஹேம்நாத் திட்டிவிட்டு அறையை விட்டுச் சென்றுள்ளார்.
இதனால் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தத்திலேயே சித்ரா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.