அன்பு எனும் பட்டாம்பூச்சி பறக்கட்டும்!

‘தினமலர்’ சேது

மதியம் ஒரு மணி.

என் மதிய உணவுக்கான நேரம்.

மதியம் 2.00 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும். அலுவலகம் செல்வதற்குள், அன்றைய நாட்டு நடப்புகளை தெரிந்து கொண்டு சென்றால், பணி எளிதாகும். இதனால், செய்தி சேனல் பார்த்துக்கொண்டே உணவு அருந்துவது பல காலமாக தொடர்கிறது.

பயணம் தவிர, உணவின்போதும், உறக்கத்தின்போதும் அலைபேசியில் அழைப்பு வந்தால் ஒரு கையில் உணவும், மறுகையில் பேச்சுமாக இருந்திருக்கிறேன்.

அப்போதெல்லாம், தட்டில் வைக்கப்பட்டிருந்த உணவின் அளவு உணர முடியாது. சுவை ஞாபகத்துக்கு வந்திருக்காது. கடகடவென உணவு உள்ளே செல்ல, வயிறு நிறைந்திருக்கும்.

சந்திப்புகளின்போது சந்திப்பவரின் பேச்சில் கவனம் வேண்டும்…

பயணத்தின்போது சாலையில் கவனம் இருக்க வேண்டும்…

உணவின்போது உணவில் கவனம் செலுத்த வேண்டும்…

ஒரு நாளில், சில நிமிடங்களாவது மூச்சை கவனிக்க வேண்டும்… என்று பலமுறை முயற்சித்திருக்கிறேன்.

திடீர் நினைவு வர, இன்று மீண்டும் அதே முயற்சி!

டிவியை அணைத்து வைத்தேன். செல்போன், ‘ஏரோபிளேன் மோட்’க்கு மாற்றினேன்.

தட்டில் சுடச்சுட சாதம். நன்றாக காய்ச்சப்பட்ட நெய் 2 ஸ்பூன். அதில், சூடு குறையாமல் விடப்பட்ட வெண்பூசணி சாம்பார். சோயா பீன்ஸ் பொரியல். அகத்திக்கீரை பொரியல். நெல்லிக்காய் துவையல் பரிமாறினார்கள்.

பற்களுக்கிடையே அகப்பட்ட வெண்பூசணி துண்டுகளின் நீர்த்தன்மை புது சுவை உணர்த்தியது. சாம்பாரின் சுவையை நெய் அதிகப்படுத்தி இருந்தது. குழைவான சாதம் நெகிழ்வாக குடலுக்குள் வழக்கிச் சென்றது.

சாம்பாரில் தென்பட்ட கறிவேப்பிலையும், சீரக சுவையும் மேலும் மெருகூட்டின. இடையிடையே, சோயா பீன்ஸ் பொரியல், அகத்திக்கீரை பொரியலின் சுவை புதிதாக இருந்தன.

நெல்லியின் துவர்ப்பு, அகத்தியின் கசப்பு, சோயாவின் மசாலா, வெண்பூசணியின் இனிப்பு என 20 நிமிட உணவு நேரத்தில் மனமும், வயிறும் பூரித்தது.

அதைவிட, 2 மணிநேரமாக கால்கடுக்க நின்று சமைத்த மனைவியின் முகத்திலும், அருகில் அமர்ந்து ‘இதை இன்னும் வை. அதை கொஞ்சம் எடுத்துக்கோ’ என்று சொல்லி சிலிர்த்த தாயின் முகத்திலும் பூரிப்பு.

சிறு வயதில், அடுப்பில் உலை கொதிக்கும். அதன் வாசனையே பசியை கிளறும். உலை கொதிப்பதை எட்டி எட்டிப்பார்த்தபடியே கையில் தட்டுடன் அமர்ந்து இருப்போம்.

சாதம் வெந்து வடித்து பரிமாறும்போது, அதில் இருந்து கிளம்பும் ஆவி முகத்தில் வந்து மோதும். கொதிக்கும் சாதத்தை விரலால் கிளறிவிட்டு. அது சுளீரென்று சுட்டதும், விரலை விடுவித்து, சூடு தணித்து மீண்டும் கிளறுவோம். சோறு ஆறும் வரை பசி பொறுக்காது. அவசர அவசரமாக அள்ளி விழுங்குவோம். குடலுக்குள் இறங்கிய சோற்றின் சூட்டை சாப்பிட்டு முடிந்தபின்னும் உணர முடியும். ‘தொட்டுக்க’ வைத்திருந்த காய்ந்த மல்லியின் துவையல் பரிதாபமாக எங்களை பார்க்கும்.

ஆன்ட்ராய்டு யுகத்துக்குப்பின், உணவை அப்படி ருசித்த காலங்கள் எங்கே போயின.

உடல், மன, உறவு சிதைவுகளுக்குப்பின் மனித குலம் மீண்டும் மரபுகளை மீட்டெடுக்க போராடுகிறது. மனதின் லகானை நானும் கையில் பிடித்துவிட்டேன். சில சமயங்களில் நழுவுகிறது.

நேரம், 01.30 ஆனது. தி.நகர் பேருந்து நிலையம் கடந்து எழும்பூர் நோக்கி ஸ்கூட்டர் வேகம் பிடித்தது.

அலுவலகம் சென்று அமர்ந்தபோதும் அன்றைய உணவு வேளையின் நினைவுகள்தான்.

வெண்மை நிறசாதம். பழுப்புநிற சாம்பார். செந்நிற சோயா பீன்ஸ் பொரியல். பச்சைநிற அகத்திக்கீரை பொரியல். அரக்கு நிறத்தில் நெல்லி துவையல்.

அரிசி, பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, தக்காளி, வெண்பூசணி, சோயா பீன்ஸ், அகத்திக்கீரை, தேங்காய், நெல்லிக்காய் என என் உணவில் எத்தனை தானியங்கள், காய்கறிகள்.

என் உணவில் எத்தனை பேரின் உழைப்பு.

பயிர் வளர்ந்து, நெல் மணி முளைத்து, அவற்றை அறுவடை செய்து அரிசி உற்பத்திக்காக ஆலைக்கு அனுப்பி வைக்கும் விவசாயிக்கு, போட்ட முதலீடு கிடைத்திருக்குமா இல்லையோ தெரியாது.

60 நாட்களுக்கும் மேலாக அவன் வாழ்வும், நினைவும் அந்த நெற்பயிர் மீதுதானே இருந்திருக்கும். அவனது உழைப்பால் கிடைத்த இந்த அரிசியை நாம் உண்ணும் பொழுதில் அவன் வயிறு நிறைந்திருக்குமா இல்லையா தெரியாது.

அதேபோல், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், பிற தானியங்கள் என ஒரு மனிதனின் ஒரு வேளை உணவுக்காக, தன் சத்துக்கள் அனைத்தையும் கொடுத்து, பூமி எத்தனை எத்தனை பயிர்களை பயிர்வித்திருக்கிறது.

உலக மக்கள் தொகை 7.2 பில்லியன்.

மனித குலம் மேம்படுவது பற்றி மட்டுமே மனிதன் அதிகம் சிந்திக்கிறான். ஆனால், மனிதன் மட்டுமல்ல, சிறு எறும்பில் தொடங்கி, பெரும் விலங்கு வரைக்கும் சகல ஜீவராசிகளுக்கும் உணவு படைக்கிறது பூமி.

‘நீ எனக்கு எது செய்தாலும் நான் உனக்கு நன்மையே செய்வேன்’ என்று சுழலும் பூமி தாயின் தியாகத்தையும், போட்ட காசு கிடைக்காமல் தான் கடனாளியானாலும், துளியும் பேராசையின்றி, தன் வாழ்நாளை வயல்வெளிகளில் கழித்து நமக்கு உணவிடும் விவசாயிகளின் பெரும் சேவையும் படம்போல் மனசுக்குள் ஓடி நாடி சிலிர்த்தது.

என் ஒரு வேளை உணவுக்காக பாடுபட்ட முகம் அறியா அத்தனை உயிர்களுக்கும் மனம் நன்றி சொன்னது.

போஸ்ட்மேன், கண்டக்டர், வங்கியாளர், அலுவலக உதவியாளர், ஓட்டல் சர்வர், காவலாளி, போக்குவரத்து போலீஸ்காரர், ஏன் மனைவியோ, குழந்தைகளோ என சக மனிதர்கள் தன் கடமையை செய்திருந்தாலும், அவர் செயலுக்கு நன்றி சொல்லுங்கள்.

உங்களுக்கும் அவருக்கும் இடையே ஒரு அன்பு பட்டாம்பூச்சி சிறகு விரிக்கும். அது இந்த பிரபஞ்சத்தில் புதிய சக்தியை ஔிரவிடும்.

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*