சென்னை:
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 500க்கும் குறைவாகவே இருந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தற்போது ஊரடங்கு முழுவதும் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது. பொதுமக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் மாஸ்க் கூட அணியாமல் சுற்றும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேர் பாதிப்பு என்கிற நிலை கவலையளிக்கிறது. குடும்ப நிகழச்சிகள், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அரசியல் சார்ந்த கூட்டங்களில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணியாதது கவலை அளிக்கிறது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி கூட்டங்களை நடத்த வேண்டும். நோய் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் எந்த கூட்டங்களும் நடத்த கூடாது. பொதுக்கூட்டங்களில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணிவதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
கடந்த 3 நாட்களில் முகக்கவசம் அணிவது அதிகரித்துள்ளது. பொதுமக்கள் அலட்சியமாக இருக்க கூடாது. முகக்கவசம் அணியாவிட்டாலும் கொரோனா வராது என்ற அலட்சியத்தில் மக்கள் உள்ளனர். கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். காய்ச்சல் வந்தால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று உறுதியானதால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வர வேண்டும். கொரோனா தொற்று உள்ளவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதில்லை. சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர், தஞ்சாவூரில் கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரக் கூடும். சென்னையில் கடந்த ஆண்டு பாதிப்பு அதிகம் இருந்த இடங்களில் தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது. சென்னையில் கடந்தாண்டு பாதிப்பு குறையாக இருந்த இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னை தேனாம்பேட்டை, வளசரவாக்கம், அண்ணாநகர், உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு இலவசமாக வழங்கும் கொரோனா தடுப்பூசியை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 3,400-க்கும் அதிகமான இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதுவரை 16 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 20 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என கூறினார். தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். கொரோனா மையங்களை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.