ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா, கான்பெராவில் நடந்த 2வது போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பீல்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணிக்கு ஜார்ஜியா வோல மற்றும் பெத் மூனே ஜோடி சிறப்பான தொடக்கம் தந்தது. ஜார்ஜியா 32 பந்துகளில் அரைசதம் கடந்தார். அருந்ததி பந்தில் பெத் மூனே 46 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து அருந்ததி சிறப்பாக பந்துவீசி ஜார்ஜியாவை 88 ரன்களுக்கு வெளியேற்றினார் (11 பவுண்டரி, 1 சிக்சர்). 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. ஆஷ்லே கார்ட்னர் 10 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
164 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ஷைபாலி வர்மா (29) மற்றும் ஸ்மிருதி மந்தனா (31) நல்ல தொடக்கம் அளித்தனர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் (4) விரைவில் அவுட்டானார். கேப்டன் ஹர்மன்பிரீத் 36 ரன்கள் எடுத்து போராடினார். ரிச்சா கோஷ் 19 ரன்கள் சேர்த்தார். மற்ற வீராங்கனைகள் ஏமாற்றியதால், இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 144 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
இதற்கிடையில், ஹர்மன்பிரீத் கவுர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனையாக புதிய சாதனை படைத்தார். அவர் இதுவரை 356 போட்டிகளில் (189 டி-20, 161 ஒருநாள், 6 டெஸ்ட்) விளையாடியுள்ளார்.
அடுத்த இடங்களில் சுசீ பேட்ஸ் (355), எல்லிஸ் பெர்ரி (349), மிதாலி ராஜ் (333), சார்லோட்டி எட்வர்ட்ஸ் (309) உள்ளனர்.
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்