டாக்கா,
வங்காளதேசத்தின் சுதந்திர தின பொன்விழாவும், வங்காளதேசத்தை நிறுவிய ‘வங்கபந்து’ ஷேக் முஜிப்பூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவும் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டம், இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
பிரதமர் மோடி 26-ந்தேதி வங்காளதேசத்துக்கு செல்கிறார். அந்த பயணத்தில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வங்காளதேச வெளியுறவு மந்திரி அப்துல் மோமன் கூறியதாவது:-
பிரதமர் மோடி, வருகிற 26-ந்தேதி வங்காளதேசத்துக்கு வருகிறார். அவர் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார். இந்த பேச்சுவார்த்தையின்போது, 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கிறோம்.
பேரிடர் மேலாண்மை தொடர்பான ஒரு ஒப்பந்தமும், இரு நாடுகளின் நிறுவனங்கள் இடையிலான ஒத்துழைப்பு தொடர்பான 2 ஒப்பந்தங்களும் அடங்கும். இந்த ஒப்பந்தங்கள் இன்னும் ஓரிரு நாளில் இறுதி செய்யப்பட்டு விடும்.
பிரதமர் மோடி தனது பயணத்தின்போது தலைநகர் டாக்காவுக்கு வெளியே 3 இடங்களுக்கு செல்வார். துங்கிபாராவில் ஷேக் முஜிப்பூர் ரகுமான் பிறந்த கிராமத்தில் உள்ள வங்கபந்து வழிபாட்டு தலத்துக்கு செல்வார். கோபால்கஞ்ச், சத்கிரா ஆகிய இடங்களில் உள்ள 2 இந்து கோவில்களுக்கும் செல்வார்.
இந்த கோவில்கள், இந்து மடுவா சமூகத்தினரின் வழிபாட்டு தலங்களாகும். இந்த சமூகத்தினர் மேற்கு வங்காளத்திலும் வசித்து வருகிறார்கள்.
இதில், பிரதமர் மோடி, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலி, நேபாள அதிபர் வித்யாதேவி பண்டாரி, பூடான் பிரதமர் லோடே ஷெரிங் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
பிரதமர் மோடி உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்கள், தேசிய நினைவிடத்துக்கு சென்று வங்காளதேச போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள். வங்கபந்து அருங்காட்சியகத்துக்கு சென்று ஷேக் முஜிப்பூர் ரகுமானுக்கு மரியாதை செலுத்துவார்கள். விசேஷ ராணுவ அணிவகுப்பை பார்வையிடுவதுடன் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். பிரதமர் மோடி, 27-ந்தேதி இந்தியா திரும்புவார்.