Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 17 Feb 2026

அண்ணாமலை குறுக்கு விசாரணை: “கடன் தந்த நிறுவனம் என் மகனுடையது என தெரியாது” – டி.ஆர். பாலு நீதிமன்ற பதில்

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்ற அவதூறு வழக்கில், தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு, தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை நடத்திய குறுக்கு விசாரணைக்கு பதிலளித்தார்.

நீதிமன்றத்தில் பாலு அளித்த பதிலில், “எனக்கு 1.46 கோடி ரூபாய் கடன் உள்ளது. என் மனைவி பெயரில் 6.60 கோடி ரூபாய் கடன் உள்ளது. இந்தக் கடனை ‘டிரையூன் இம்பெக்ஸ்’ என்ற நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளேன். அந்த நிறுவனத்தை யார் நடத்துகிறார்கள் என்பது எனக்கு தெரியாது. என் மகன் ராஜ்குமார் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் என்றால், அது குறித்து எனக்கு தெரியாது” என்றார்.

மேலும், அந்த நிறுவனம் ஜி.எஸ்.டி பதிவு ரத்து செய்யப்பட்ட நிலையில் இருந்தாலும், அதிலிருந்து கடன் பெற்றது கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி அல்ல என்றும் அவர் மறுத்தார்.

குறுக்கு விசாரணையின் போது, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறியதாகச் சொல்லப்படும் “பத்து கப்பல்கள் வாங்கியது” குறித்த கேள்விகளுக்கும் பாலு பதிலளித்தார். அவை உள்நோக்கத்துடன் கூறப்பட்டவை என்றும், சேது சமுத்திர திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் இல்லை என்றும் தெரிவித்தார்.

வடசேரி கிராமத்தில் உள்ள தொழிற்சாலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அது சாராய ஆலை அல்ல; ரசாயன தொழிற்சாலை என்றும், தாம் ஒரு பங்குதாரர் மட்டுமே என்றும் கூறினார்.

இதற்குப் பிறகு நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, டி.ஆர். பாலுவை மூன்று மணி நேரம் குறுக்கு விசாரணை செய்ததாக தெரிவித்தார். தாம் சுமத்திய குற்றச்சாட்டுகளில் நம்பிக்கை உள்ளதால் நேரடியாக ஆஜராகி வாதிட்டதாகவும் கூறினார். மேலும், பாலு தம்மீது புதிய அவதூறு குற்றச்சாட்டு சுமத்தியதால், அவர்மீது புதிய வழக்கு தொடர உள்ளதாகவும் அறிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணையில் மேலும் பல கேள்விகள் எழுப்பப்பட உள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்