இசைஞானி இளையராஜாவுக்கு ‘பத்மபாணி’ வாழ்நாள் சாதனை விருது
மும்பை: இந்திய இசை உலகின் மாமேதை, இசையமைப்பாளர் இளையராஜா, ‘பத்மபாணி’ வாழ்நாள் சாதனை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து மஹாராஷ்டிரா அரசு ஆண்டுதோறும் நடத்தும் அஜந்தா–எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா, ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4 வரை மஹாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் நடைபெறுகிறது. விழாவின் தொடக்க நாளான ஜனவரி 28-ம் தேதி, ராஜ்யசபா உறுப்பினரும் இசையமைப்பாளருமான இளையராஜாவுக்கு இந்த உயரிய விருது வழங்கப்படும் என விழா குழுவினர் அறிவித்துள்ளனர்.
விருதுடன் நினைவுப்பரிசு, பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட உள்ளது. இதற்கு முன்பு ஜாவித் அக்தர், சாய் பரஞ்ச்பே, ஓம் புரி உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.