குடியரசு தின அணிவகுப்பில் வரலாறு படைத்த சிம்ரன் பாலா – ஆண்கள் படையை வழிநடத்தும் முதல் பெண் அதிகாரி
இந்தியாவின் 76வது குடியரசு தின விழாவில் புதிய வரலாறு உருவாகியுள்ளது. டில்லி கர்தவயா பாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், சிஆர்பிஎப் ஆண்கள் படைப்பிரிவை 26 வயதான இளம் பெண் அதிகாரி சிம்ரன் பாலா தலைமையேற்று வழிநடத்த உள்ளார். ஆண்கள் படைக்கு பெண் ஒருவர் தலைமை தாங்குவது இதுவே முதல்முறையாகும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த சிம்ரன் பாலா, அர்ப்பணிப்பு மற்றும் துடிப்பான பணிக்கு பெயர் பெற்றவர். ரஜோரி மாவட்டத்தில் இருந்து சிஆர்பிஎப் அமைப்பில் அதிகாரியாக இணைந்த முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்முவில் உள்ள காந்திநகர் பெண்கள் கல்லூரியில் அரசியல் அறிவியல் பட்டம் பெற்ற அவர், 2025ஆம் ஆண்டு சிஆர்பிஎப் பணியில் சேர்ந்தார். முதன்முறையாக சத்தீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட அவர், பயிற்சியின் போது சிறந்த அதிகாரி என சான்றிதழ் பெற்றுள்ளார்.
சிம்ரன் பாலாவின் இந்த சாதனை, பெண்களின் திறன் மற்றும் தலைமைத் திறனை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.