Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 22 Aug 2019

சட்டத்தின் மாண்பு முக்கியம்! : ஆர்.ஆர்.கோபால்ஜி

தேடப்பட்டுவந்த ப. சிதம்பரம், திடீரென நேற்றிரவு, காங்கிரஸ் ஆபீசுக்கு வந்து, தன் விளக்கத்தை சொன்னார். அதன்பிறகு நடந்ததெல்லாம், செய்தி.
இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.

எதிர்க்கட்சி தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்போது, ஆளும் கட்சியின் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுப்புவது சகஜம். பாஜ எதிர்க்கட்சியாக இருந்தபோதும் இதே குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறது.

ஆனால், இந்த முறை, அரசியல் பழிவாங்கல் என்பதற்கு காங்கிரஸ், அதன் தலைவர்கள் சொல்லும் காரணங்கள் தீவிர பரிசீலனைக்கு உரியவை. காங்கிரஸ் சொல்லும் காரணங்களில் முக்கியமானது, 2010ல் ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது, போலி என்கவுன்டர் வழக்கில், அப்போது குஜராத் அமைச்சராக இருந்த அமித்ஷாவை சிபிஐ கைது செய்தது. இப்போது அமித்ஷா உள்துறை அமைச்சரானதும் பழைய பகையை மனதில் வைத்து பழிவாங்குகிறார் என்பது காங்கிரசின் குற்றச்சாட்டு.

இந்த விவகாரத்தில் அமித்ஷா, கைது செய்யப்பட்டதும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சிறைக்கு சென்றார். 3 மாத சிறைவாசத்துக்கு பிறகு, ஜாமீன் பெற்று வெளியே வந்ததும், வழக்கு குஜராத்தில் விசாரிக்கப்படக் கூடாது என்று சொல்லி, காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சிறப்பு கோர்ட் அமைத்து விசாரிக்கப்பட்டது. 2 ஆண்டுகள் குஜராத்துக்குள் நுழையாமல் மும்பையிலேயே தங்கியிருந்து, விசாரணை முடிவில் காங்கிரஸ் அரசு சுமத்திய அத்தனை குற்றச்சாட்டுகளில் இருந்தும் மும்பை கோர்ட் அவரை விடுவித்த பிறகுதான் குஜராத்துக்கு அமித்ஷா திரும்பினார்.

காங்கிரசார் சொல்வதுபோல், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இருந்தாலும், அமித்ஷாவை போல் வழக்கை எதிர்கொண்டு, தன்னை குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டியதுதானே என்ற கேள்விக்கு காங்கிரசிடம் பதில் இல்லை.

அடுத்ததாக, 7 மாதமாக சும்மா இருந்த நீதிபதி, ஓய்வுபெறுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்னதாக முன்ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று சொல்லி நீதிபதியின் உத்தரவுக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் உள்நோக்கம் கற்பிக்கிறார்.

தமிழக காங்கிரஸ் தலைவரோ, ஆளும் கட்சி நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று பேட்டி ஒன்றில் பேசுகிறார். அப்படியானால், காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்தபோதும் அப்படித்தான் நடந்ததா? அப்போது பாஜ சொன்னதைபோன்று பழிவாங்கும் நடவடிக்கை என்பதை காங்கிரசே ஒப்புக் கொள்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

இதுபோன்ற விபரீதமான குற்றச்சாட்டுகள், பூமராங் ஆக காங்கிரசையே திருப்பித் தாக்கும் என்பதை காங்கிரஸ் புரிந்து, சட்டத்தையும் நீதித்துறையையும் மதித்து பேச வேண்டும்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்