பயனர்களின் போன்களில் இருந்து போலி எஸ்.எம்.எஸ்: ‘விங்கோ’ செயலிக்கு மத்திய அரசு தடை
புதுடில்லி: பயனர்களின் மொபைல் போன்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி, கோடிக்கணக்கான போலி குறுந்தகவல்களை அனுப்பி இணைய மோசடிகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, ‘விங்கோ’ (Wingo) என்ற மொபைல் செயலியை மத்திய அரசு தடை செய்துள்ளது.
பகுதிநேர வேலை என்ற பெயரில் தினமும் சிறு தொகை வழங்கப்படும் என கூறி பயனர்களை ஈர்த்த இந்த செயலி, பதிவிறக்கம் செய்யப்பட்டவுடன் பயனர்களின் மொபைல் போன்களில் இருந்து தானாகவே குறுந்தகவல்கள் அனுப்பும் அமைப்பை செயல்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.
இந்த மோசடியை இந்திய சைபர் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் (I4C) விசாரித்ததில், செயலியை பயன்படுத்தியவர்கள் தங்களுக்கு தெரியாமலேயே இணைய குற்றவாளிகளின் எஸ்.எம்.எஸ் மோசடி வலையில் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செயலியின் மூலம் தினமும் சுமார் 1.5 கோடி பேருக்கு மோசடி குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் I4C இணைந்து ‘விங்கோ’ செயலியை முடக்கியுள்ளன. மேலும், இந்த செயலியை டெலிகிராம் மற்றும் யூடியூப் வழியாக விளம்பரப்படுத்திய சேனல்களும் முடக்கப்பட்டுள்ளன.