ஆல்கஹால் வாசனை: ஏர் இந்தியா விமானி கனடாவில் பிடிபட்ட சம்பவம்
புதுடில்லி:
கனடாவில் இருந்து இந்தியா புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தை இயக்க வேண்டிய விமானியிடம் ஆல்கஹால் வாசனை வந்ததாக சந்தேகிக்கப்பட்டதால், கனடா அதிகாரிகள் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் கடந்த மாதம் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவின் வான்கூவர் நகரிலிருந்து டில்லிக்கு புறப்பட இருந்த விமானத்தை அந்த விமானி இயக்கவிருந்தார். விமான நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் அவர் மதுபானம் வாங்கியதாக அல்லது அருந்தியதாக சந்தேகித்த ஊழியர் ஒருவர், இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவலின் பேரில் உடனடியாக அதிகாரிகள் விமானியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவரிடம் ப்ரீத் அனாலிசர் சோதனை நடத்தப்பட்டதில் அவர் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து விமானியை அதிகாரிகள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை தொடர்ந்துள்ளனர்.
இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “வான்கூவரிலிருந்து டில்லி செல்லவிருந்த விமானம், கடைசி நேரத்தில் தாமதமாக புறப்பட்டது. விமானியின் உடல் தகுதி குறித்து கனடா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாற்று விமானி மூலம் அந்த விமானம் இயக்கப்பட்டது. இதனால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு மன்னிப்பு கோருகிறோம். மேலும் கனடா அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்” என தெரிவித்துள்ளது.