மதம் மாற மறுத்தாலும் தாக்குதல் நடக்கலாம்: கோபால்ஜி எச்சரிக்கை!
மதமாற்றம் செய்தவர்களை நேரில் எச்சரித்த பாமக நிர்வாகியை கொலை செய்தவர்களை மட்டுமின்றி அவர்களுக்கு பின்னணியில் இருப்பவர்களையும் பிடித்து தண்டிக்க வேண்டும் என்று தமிழக அரசை விஸ்வ இந்து பரிஷத் (தமிழ்நாடு) பொதுச் செயலாளர் ஆர்ஆர். கோபால்ஜி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் மதமாற்றம் செய்த முஸ்லிம்களிடம் துணிச்சலாக நியாயம் கேட்ட பாமக நிர்வாகி ராமலிங்கம் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இந்த ஈவு இரக்கமற்ற செயலை நடத்தியவர்களை மட்டுமல்லாமல், அவர்களுக்கு பின்னணியில் இருந்து உதவியவர்களையும் தமிழக அரசு தேடிப் பிடித்து தண்டிக்க வேண்டும்.
தமிழகத்தில் எந்த பயங்கரத்தையும் நடத்தலாம் என்ற எண்ணம் வளர்ந்துவிட்டதை தமிழக ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டு, மதம் மாற்றும் கும்பலை தடுத்து நிறுத்தாவிட்டால், மாநிலத்தின் அமைதி சீர்குலைந்துவிடும். நியாயம் கேட்டவரின் கையை வெட்டிக் கொன்று தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டவர்கள், அடுத்து மதம்மாற மறுப்பவர்கள் மீதும் அதே தாக்குதல்களை நடத்த மாட்டார்களா?
போலீசும் அரசும் வேடிக்கை பார்த்தது போதும். இனிமேலாவது, போலீசார் முதுகெலும்புடன் துணிந்து செயல்பட வேண்டும்.
தமிழகத்தை வன்முறை களமாக மாற்ற நடக்கும் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.