சட்டசபையில் மைக் அணைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: கவர்னர் ரவி வெளியேற்றம் குறித்து லோக் பவன் கடும் விளக்கம்
சென்னை: சட்டசபையில் கவர்னர் ஆர்.என். ரவி பேச முயன்ற போது அவரது மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டதால் பேச அனுமதிக்கப்படவில்லை எனக் கூறி, அவர் அவையிலிருந்து வெளியேறினார். இதுகுறித்து கவர்னர் மாளிகையான லோக் பவன் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், உரையில் பல ஆதாரமற்ற கூற்றுகள் மற்றும் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மாநிலத்தின் முக்கியமான பல பிரச்னைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ரூ.12 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டதாக கூறுவது உண்மைக்கு மாறானது என்றும், பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடைமுறையில் வராமல் காகிதத்தில் மட்டுமே உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் பாதுகாப்பு, போக்சோ சட்டத்தின் கீழ் அதிகரித்த பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பரவல், இளைஞர்களின் தற்கொலைகள், தலித் மக்களுக்கு எதிரான அத்துமீறல்கள், கல்வித் தர சரிவு, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உரையில் இடம்பெறவில்லை என லோக் பவன் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், கிராம பஞ்சாயத்துகளில் தேர்தல்கள் நடத்தப்படாத நிலை, கோவில்களின் நிர்வாகம் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பது, MSME நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அரசு ஊழியர்களின் அதிருப்தி மற்றும் தேசிய கீத அவமதிப்பு போன்ற விஷயங்களும் புறக்கணிக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.