“நம்பிக்கை இழக்காத போராளி கோலி – இளம் வீரர்களுக்கு வாழ்நாள் பாடம்: கவாஸ்கர்”
இந்துாரில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்தாலும், விராத் கோலியின் போராட்டம் கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 338 ரன் என்ற இமாலய இலக்கை துரத்திய இந்தியா, ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. ஒரு முனையில் கோலி பொறுப்புடன் விளையாடி 124 ரன் விளாசினார். இது அவரது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 54வது சதமாகும்.
இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், “கோலி ஒருபோதும் நம்பிக்கையை இழக்க மாட்டார். சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவார். கடைசி வரை போராடுவார். இது இளம் வீரர்களுக்கான மிகச் சிறந்த பாடம்” என்று பாராட்டினார்.
மேலும், இந்திய அணியின் தோல்விக்கு பீல்டிங் குறைபாடுகளும் காரணம் எனக் குறிப்பிட்ட கவாஸ்கர், சில வீரர்கள் எளிதான சிங்கிள்களை அனுமதித்ததால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அழுத்தமின்றி ரன் குவித்தனர் என்றார். அனுபவ வீரர்கள் இல்லாமலேயே நியூசிலாந்து இந்திய மண்ணில் வரலாற்றுச் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.