7 மாவட்டங்களில் இன்று கனமழை: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று (ஜனவரி 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், இலங்கையின் முல்லைத்தீவு அருகே கரையை கடந்த பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்து தற்போது வலுவிழந்து வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக மாறியுள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.